PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி, சமீபகாலமாக ஒரு பொய்யில் இருந்து மற்றொரு பொய்க்கு தாவித்தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் முகவரி துறையின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டவுட் தனபாலு: உங்க வாதப்படியே, பழனிசாமி ஊர்ந்து சென்றாலும், இன்று அ.தி.மு.க.,வின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்காரே... ஆனா, நீங்க என்னதான் உருண்டு, புரண்டாலும் உங்க கட்சியின் தலைமை நாற்காலியை தொட்டாவது பார்க்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: அதிக அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்தால், 'நிறைய அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்துள்ளனரே' என, எதிர்தரப்பில் கொந்தளிப்பர். அதனால், இம்முறை தேவையில்லை என முடிவெடுத்து, பிரசாரத்துக்கு அமைச்சர்களை குறைத்து விட்டோம். ஆனால், அதையே கேள்வியாக எழுப்புகின்றனர். உள்ளூரில் இருக்கும் அமைச்சர்கள் பிரசாரம் செய்தால் போதும் என தலைமை அறிவுறுத்திவிட்டது. அந்த வகையில் தான், நான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.
டவுட் தனபாலு: ஈரோடு கிழக்கில், உங்களை எதிர்க்க ஆளே இல்லாம சீமான் கட்சி மட்டும் தான் களத்தில் நிற்குது... அவருக்கெல்லாம் நீங்க ஒருத்தரே போதும்னு உங்க தலைமை முடிவு பண்ணிட்டது நல்லாவே தெரியுது... அதே நேரம், ஈரோடு கிழக்கு வெற்றிக்கு நீங்க மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: வரும் 2026 தேர்தலில் தி.மு.க.,வெற்றி பெற வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு கட்சியில் அண்ணாதுரை படம் உள்ளது. மற்றொரு கட்சியில் அந்த படம் இல்லை. ஆனால், இருவரும் பல்வேறு விஷயங்களிலும், நடவடிக்கைகளிலும் ஒன்றாக தான் உள்ளனர்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... '2026 தேர்தல் தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் மட்டும் தான்'னு முதல்வரே பிரகடனம் பண்ணிட்டாரே... 'அந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக் கூடாது, நாங்களும் வர மாட்டோம்.... நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வேற யாரும் வரக்கூடாது' என்பதில், ரெண்டு திராவிட கட்சிகளும் ஒற்றுமையாகவே இருக்காங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

