
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: சினிமாவில் கவுரவ வேடத்தில் நடிப்பவர், படத்தில் அவ்வப்போது வந்து போவார். அதுபோல, அரசியலை நடிகர் விஜய் பயன்படுத்துகிறார். அவ்வப்போது வந்து அரசியல் பேசுகிறார்.
டவுட் தனபாலு: உங்க அப்பா சிதம்பரம் கூட, காங்., மத்தியில் ஆட்சியில இருக்கிறப்ப தான், மத்திய அமைச்சராக, 'ஆக்டிவ்'வா இருப்பாரு... காங்., எதிர்க்கட்சியாகிட்டா, நீங்க சொல்ற மாதிரி அப்பப்ப வந்து கவுரவ அரசியல் தானே பண்றார்... அவர் வழியை தான் விஜயும் பாலோ பண்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்' என்று ஸ்டாலின் பலமுறை பேசி வருகிறார். ஆனால், மக்கள் உரிமைக்காக போராடினால், அனைத்து தலைவர்கள் மீதும் வழக்கு தொடுத்து வருகிறார். மதுரை, மேலுாரில் முதல்வருக்கு பாராட்டு விழா மதியம் 3:00 மணிக்கு நடைபெறுகிறது. மதியம் 1:00 மணியளவில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து என்ற அரசாணை வெளியிடப்படுகிறது. அப்படியானால், ஒவ்வொரு முறையும் ஸ்டாலினுக்குபாராட்டு விழா நடத்தி தான், வழக்கை வாபஸ் வாங்க முடியுமா?
டவுட் தனபாலு: அட, தி.மு.க., கூட்டணி கட்சிகள் மீதே வண்டி, வண்டியா வழக்குகளை பதிவு செய்திருக்காங்களே... குறிப்பா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல பதிவான வழக்குகளை பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது... நாளைக்கு நீங்களே ஆளுங்கட்சி வரிசைக்கு போயிட்டாலும், இதையே தான் பண்ணுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கோவையில், 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனம், எந்த அறிவிப்பும் வழங்காமல் மூடப்பட்டதாக தெரிகிறது. தொழில் துறை அமைச்சர் ராஜா, மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை தக்கவைத்துக்கொள்ளவோ முயற்சி எடுக்கவில்லை. 2022ல் துபாயில் கையெழுத்திட்ட, 6,000 கோடி ரூபாய் முதலீடு இன்னும் செயல்பாட்டிற்குவரவில்லை.
டவுட் தனபாலு: உள்ளூர்ல இருக்கிற நிறுவனங்களையே ஒழுங்கா செயல்பட வைக்க முடியலை... இதுல, வெளிநாட்டுக்கு எல்லாம் போய், முதலீடுகளை ஈர்க்கிறேன்னு மக்கள் வரிப்பணத்தை வெட்டியா செலவு பண்ணியதுதான் மிச்சம் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

