PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொழில்கள் வாயிலாக, தமிழகத்திற்கு 10.07 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் ராஜா குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில், எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில், இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்ற, பழனிசாமி கேள்விகளுக்கு நேரடியான பதிலை அமைச்சர் அளித்தால் நல்லது.
டவுட் தனபாலு: உங்க ஆட்சியிலும் பழனிசாமி வெளிநாடு களுக்கு எல்லாம் முதலீடுகளை ஈர்க்கப் போயிருந்தாரே... அவர் ஈர்த்த முதலீடுகள், வந்த தொழில்கள், கிடைத்த வேலைவாய்ப்புகளை பட்டியல் போட்டுட்டு, ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
பா.ம.க., தலைவர் அன்புமணி: கடந்த 1996 சட்டசபை தேர்தலில் தனித்து நின்று, நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற்றோம். அதில், சேலம் மாவட்டத்தில் இரு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். 29 ஆண்டுகளுக்கு முன் தனித்து நின்று வெற்றி பெற்ற மாவட்டத்தில், இன்று கூட்டணி சேர்ந்தும், இருவர்தான் உள்ளனர்; இது கட்சிக்கு வளர்ச்சி அல்ல.
டவுட் தனபாலு: உங்க ஆதங்கத்துலயே விளக்கம் இருக்கே... தனியா நின்னுட்டு இருந்த நீங்க, எப்ப அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு மாறி மாறி கூட்டணி வைக்க ஆரம்பிச்சீங்களோ, அப்பவே உங்களது தனித் தன்மை போயிடுச்சு... அதனால தான், 29 ஆண்டுகள் ஆகியும் உங்க கட்சியால் வளர முடியலை என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி: பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. பொருளாதாரத்தில் நாம் இன்னும் சமநிலையற்றவர் களாகவே இருக்கிறோம். பல துறைகளிலும் இன்னும் இறக்குமதியைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எல்லாவற்றிலும் சுயசார்பு, தன்னிறைவு என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
டவுட் தனபாலு: பா.ஜ.,வில் இருந்துட்டே, காங்கிரஸ்காரங்க மாதிரி ஏன் பேசிட்டு இருக்கீங்க... அதுக்கு பதிலாக, பேசாம காங்கிரஸ்லயே ஐக்கியமாகி, இந்த குற்றச்சாட்டுகளை வைத்தால், அந்த கட்சியிலாவது ஏதாவது பதவி தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

