PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: கூட்டணி தலைவர்கள் பேசியதன் அடிப்படையில் தான், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுகிறது. கூட்டணியில் எந்த கட்சிக்கும், குறிப்பிட்ட எந்த தொகுதியையும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. கூட்டணி கட்சியுடன் பேசிதான் சீட்கள் ஒதுக்கப்படும்.
டவுட் தனபாலு: அப்படியா...? ஆனா, அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு எந்த கூட்டணியில் உங்க கட்சி இடம்பெற்றாலும், சிவகங்கை தொகுதியை தவறாம கேட்டு வாங்கிடுறீங்களே... கிட்டத்தட்ட, 40 வருஷமா அந்த தொகுதி, உங்க குடும்பத்துக்கு பட்டா போட்டுக் கொடுத்த மாதிரிதானே இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
பிரதமர் நரேந்திர மோடி: வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கும் என நம்புகிறேன். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவியிடம் வேண்டிக் கொண்டேன்.
டவுட் தனபாலு: அது சரி... பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனுக்காகவும் சேர்த்து லட்சுமி தேவியிடம் வேண்டியிருக்கலாமே... ஒருவேளை, 'அவங்க நலன்களை பாதுகாக்க தான் நம்ம அரசு இருக்குதே'ன்னு நினைச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு இருந்ததால், மத்திய அரசு ரத்து செய்து விட்டது. இதற்கு, தி.மு.க., சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. அண்ணாமலை கழுத்தில் விழ வேண்டிய மாலையை, ஸ்டாலின் தட்டிப் பறித்துள்ளார். டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
டவுட் தனபாலு: நல்லவேளை... 'இந்த திட்டத்தை கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன்... அதற்கு மதிப்பு கொடுத்துதான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து பண்ணிடுச்சு'ன்னு அடிச்சு விடாம, அண்ணாமலைக்கு வக்காலத்து வாங்கிய உங்க கூட்டணி தர்மத்தை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்.

