PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: நடிகர் கஞ்சா கருப்பு, அவருடைய மகன் சிகிச்சைக்காக சென்றபோது, சென்னை, போரூர் மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால், 'மருத்துவர்கள் இல்லை; செத்துப்போன பிணத்திற்கு சிகிச்சை அளிக்கின்றனர்' என, சினிமா வசனம் போல பேசிவிட்டு சென்றுள்ளார். கஞ்சா கருப்பு இதற்கு மேலும் கிளறினால் அவருக்குத்தான் பாதிப்பு.
டவுட் தனபாலு: கஞ்சா கருப்பு மீது இப்படி பாயுறீங்களே... பிரபல, 'யு டியூபர்' இர்பான், தன் மனைவி பிரசவத்தை வீடியோ எடுத்து, குழந்தையின் தொப்புள் கொடியை கட் பண்ணி, அதையும் வீடியோ எடுத்து பரப்பினாரே... அவர் மீது இந்த ஆவேசத்தைக் காட்டாதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து, தே.மு.தி.க., கருத்து கூற விரும்பவில்லை. அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தபோதே, ராஜ்யசபா சீட்டுக்கு கையெழுத்து இடப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தே.மு.தி.க., சார்பில், யார் ராஜ்யசபாவுக்கு செல்வார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
டவுட் தனபாலு: அது சரி... முதல்ல நீங்க, அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கீங்களா... ஏன்னா, நீங்கதான் இப்படி சொல்றீங்க... ஆனா, அந்த கட்சியினரின் நடவடிக்கையைப் பார்த்தால், உங்களை கூட்டணியில் வச்சிருக்காங்களா அல்லது, 'தேர்தல் வர்றப்ப பார்த்துக்கலாம்'னுகம்முன்னு இருக்காங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்கா விட்டாலும், அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்' என, அப்பகுதி மக்களுக்கு ஜெ., உறுதி அளித்தார். அந்த திட்டம் நிறைவேறியதற்கு முழுமுதற் காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
டவுட் தனபாலு: நீங்க முதல்வராக இருந்த போதுதான், தமிழகத்தை, 'வர்தா' புயல் தாக்கியது... அப்ப, 'நிவாரணப் பணிகளை போர்க்கால வேகத்தில் செய்தேன்'னு பெருமை அடிச்சுக்கிட்டீங்களே... அதுக்கு நீங்க உரிமை கொண்டாடுறப்ப, அத்திக்கடவு திட்டத்துக்கு பழனிசாமி உரிமை கொண்டாடக் கூடாதா என்ற, 'டவுட்' வருதே!

