PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., போலி வெற்றி பெற்றிருப்பதாக அ.தி.மு.க.,வினர் கூறுவது தவறு. இன்றைய கால கட்டத்தில் கள்ள ஓட்டு போடுவது அவ்வளவு எளிதல்ல. தேர்தல் கமிஷன் கெடுபிடியாகவே உள்ளது. நியாயமான முறையில் இத்தேர்தலை தி.மு.க., அணுகியது. தேர்தலும் நியாயமாக நடந்தது.
டவுட் தனபாலு: 'தேர்தல் கமிஷன் மட்டும் கெடுபிடி காட்டாமல் இருந்திருந்தால், சரமாரியா கள்ள ஓட்டுகளை போட்டு தள்ளியிருப்போம்... நாம் தமிழர் கட்சிக்கு, 100 ஓட்டுகள் கூட விழாம பண்ணியிருப்போம்'னு ஆதங்கப்படுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
புதுடில்லி சட்டசபை தொகுதி காங்., வேட்பாளர் சந்தீப் தீட்ஷித்: டில்லி மக்கள் மாற்றத்தை விரும்பினர். அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் இடத்தில் நான் இல்லை. எனக்காக இரவு, பகலாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. காங்கிரசுக்கு ஓட்டளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு.
டவுட் தனபாலு: இதே தேர்தலில் நீங்க ஜெயித்திருந்தால், 'ராகுல், பிரியங்காவால் கிடைத்த வெற்றி'ன்னு முழங்கியிருப்பீங்களே... அது இருக்கட்டும்... தலைநகர்லயே, 'ஜீரோ மார்க்' வாங்கிய உங்க கட்சியை, அடுத்தடுத்த தேர்தல்களில் நாடு முழுக்க மக்கள் ஏத்துக்குவாங்களாஎன்பது, 'டவுட்' தான்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துள்ளனர். 'யூஸ்லெஸ் பட்ஜெட்'டை ஒரு மணி நேரம், 20 நிமிடங்களுக்கு வாசித்துள்ளனர். இதில், தமிழகத்திற்கு ஒரு திட்டம் கூட இல்லை. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீஹாருக்கு அள்ளி கொடுத்துள்ளனர். அங்கு தேர்தல் நடக்க இருப்பதால், கோடிக்கணக்கில் நிதியையும், திட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
டவுட் தனபாலு: நடுத்தர வர்க்க மக்கள் வயிற்றில் பால் வார்த்த, '12.75 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரியில்லை' என்ற அறிவிப்பு, உங்களுக்கு 'யூஸ்லெஸ் பட்ஜெட்'டா தெரியுதா...? இதுல இருந்தே, நீங்க மேட்டுக்குடியைச் சார்ந்தவர் என்பதை, 'டவுட்'டே இல்லாம உணர்த்திட்டீங்களே!

