PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

தமிழக பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு: தமிழகத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் சூழல் உள்ளது. சட்டவிரோத நபர்கள் குறித்து யாரும் பேசினால், அவர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்துகின்றனர். தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்ற என் எண்ணம் தற்போது பொய்த்து போய் விட்டது. தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகரித்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.
டவுட் தனபாலு: தமிழகத்துல சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்தபடியே உள்ளது... ஆனாலும், 'முன்னேறிய மாநிலம்' என்ற கருப்பு கண்ணாடியை மாட்டியபடி, அரசு ஆழ்ந்த துாக்கத்தில் இருக்குது... இனியும் ஆளுங்கட்சி விழித்துக் கொள்ளவில்லை என்றால், 2026ல் எதிர்க்கட்சி வரிசையாவது தேறுமா என்பது, 'டவுட்' தான்!
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தி.மு.க., தரப்பில் தேர்தல் காலத்தில், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குறை அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக, பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றாதது பெரும் பழியாக உள்ளது. அத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் ஆபத்து உள்ளது.
டவுட் தனபாலு: ஒருவேளை பழைய பென்ஷன் திட்டத்தை தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை என்றால், நீங்க என்ன பண்ண போறீங்க என்ற, 'டவுட்' எழுதே... மூழ்கும் கப்பலில் பயணிப்பதா அல்லது பாதுகாப்பான படகில் ஏறுவதா என்பதை, உங்க பொலிட் பீரோவை கூட்டி இப்பவே ஆலோசிக்க ஆரம்பிச்சுடுங்க!
தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோதன்கர்: இதற்கு முன் கோவா மாநில காங்கிரஸ் தலைவராகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கான கட்சி பொறுப்பாளராகவும் இருந்துள்ளேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள காங்., கட்சியினர் அனைவருடன் கைகோர்த்து செயல்பட்டு, கட்சியை வலுப்படுத்தி வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல பாடுபடுவேன்.
டவுட் தனபாலு: தமிழக காங்கிரசை வலுப்படுத்தி, வெற்றிப் பாதைக்கு அழைச்சிட்டு போவேன்னா, என்ன அர்த்தம்...? தமிழகத்துல காங்கிரசை ஆட்சியில அமர்த்த பார்க்குறீங்களா... இப்படி எல்லாம் கூட்டணி தர்மத்துக்கு எதிராக பேசினா, தி.மு.க.,வின் கோபத்துக்கு ஆளாகிடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

