/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகள்: மேம்படுத்த 'செயலி' கண்டுபிடிப்பு
/
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகள்: மேம்படுத்த 'செயலி' கண்டுபிடிப்பு
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகள்: மேம்படுத்த 'செயலி' கண்டுபிடிப்பு
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகள்: மேம்படுத்த 'செயலி' கண்டுபிடிப்பு
ADDED : மார் 31, 2024 04:03 PM

திருப்பூர்: 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள 'செயலி' நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், 'குருமடி' அறக்கட்டளையின் கீழ், 'எஸ்.எஸ்.கற்றல் மையம்' என்ற பெயரில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான 'தெரபி' மையம் செயல்படுகிறது. குருமடி அறக்கட்டளை தலைவர் டாக்டர் மஞ்சுளா செந்தில், 41. அவிநாசிலிங்கம் பல்கலையில் ஏழு ஆண்டு ஆராய்ச்சி அடிப்படையில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக செயலியை கண்டறிந்துள்ளார்.
வரும், ஏப்., 2ம் தேதி 'உலக ஆட்டிசம் தினம்' கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், தனது செயலியை பிரபலப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
டாக்டர் மஞ்சுளா கூறியதாவது:
உலகில், 100ல் ஒரு குழந்தை, 'ஆட்டிசம்' குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது, உலக சுகாதார அமைப்பின் கணக்கு. இக்குறைபாடுள்ள குழந்தைகள், மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவது, பழகுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதை களைய, பலவித மாற்று முறைகளை, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, செயல்படுத்தி வருகின்றனர்.
அவற்றின் புதிய பரிணாமமாக, அவிநாசிலிங்கம் பல்கலை., சிறப்பு கல்வித்துறை பேராசிரியர் கீதா வழிகாட்டுதல் படி 'பேசும் சித்திரம்' என்ற பெயரில், 'PESI' என்ற புதிய செயலியை வடிவமைத்துள்ளோம். ஆட்டிசம் குழந்தைகளின் குறைபாடு, தினசரி வாழ்க்கையில் அவர்களுக்கான தேவைகள், வாழ்க்கைக்கல்வி, வாழ்வியல் திறன், அவர்களது பேச்சுத் திறனில் உள்ள பிரச்னைகள், மற்றவர்களுடனான தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை, 19 ஆண்டுகால அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து, இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியை பயன்படுத்தி கடந்த, 20 மாதமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதில், 60 சதவீதம் ஆட்டிசம் குழந்தைகள் நன்றாக பேசுகின்றனர். 18 சதவீத குழந்தைகள், தனது தேவைகளை எளிய வார்த்தைகளை பயன்படுத்தி, பிறருடன் புரிய வைக்க முற்படுகின்றனர். 22 சதவீத குழந்தைகள், தங்களது தேவைகளை விரல்களால் சுட்டிக்காட்டியும், தொட்டும் காண்பிக்கின்றனர்.
இந்த செயலியின் உதவியால், ஒரு வார்த்தை, இரு வார்த்தை, மூன்று வார்த்தை கொண்ட, 2.03 லட்சம் வாக்கியங்களை, ஒரு குழந்தையை பேச வைக்க முடியும். ஒவ்வொரு வார்த்தைக்கும் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இச்செயலி, ஆட்டிசம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பேச்சு மற்றும் கற்றல் குறைபாடுள்ளவர்கள், மொழித்திறன், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலிக்கு காப்புரிமை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின், அனைத்து 'ஆண்ட்ராய்டு' மொபைல்களிலும், 'ப்ளே ஸ்டோர்' வாயிலாக, பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

