/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பிசினஸில் கலக்கறாங்க மாணவிகள்! படிக்கும் போதே வருமானம்; மாறிவருகிறது 'டிரெண்ட்'
/
பிசினஸில் கலக்கறாங்க மாணவிகள்! படிக்கும் போதே வருமானம்; மாறிவருகிறது 'டிரெண்ட்'
பிசினஸில் கலக்கறாங்க மாணவிகள்! படிக்கும் போதே வருமானம்; மாறிவருகிறது 'டிரெண்ட்'
பிசினஸில் கலக்கறாங்க மாணவிகள்! படிக்கும் போதே வருமானம்; மாறிவருகிறது 'டிரெண்ட்'
UPDATED : மே 06, 2024 02:15 AM
ADDED : மே 06, 2024 12:43 AM

கோவை:படிச்சு முடிச்சுட்டு, படிப்புக்கு ஏத்தமாறி வேலை தேடி அலையும் இளைஞர்கள் இருந்த காலம் மாறி, படிக்கும் போதே பிசினஸ் செய்து கலக்கும் டிரெண்ட் தற்போது அதிகமாகியுள்ளது. அதுபோன்று, கோவை கல்லுாரிகளில் மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளில் தங்களின் திறன்களுக்கு ஏற்றவாறு தொழில்களை செய்து அசத்திவருகின்றனர்.
இதுபோன்று, பல்வேறு தொழில் செய்து அசத்திவரும் ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகளை நாம் சந்தித்தோம்...
முதலாமாண்டு தான் படிக்கிறார் மாணவி அபிநயா .. ஆரி எம்பிராய்டரி, ரெசின் ஆர்ட், பவுச், கீ செயின், டாலர் போன்றவற்றை தயாரித்து, விற்பனை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் தனக்கான சிறு, சிறு செலவினங்களை செய்துகொள்கிறார். ''தந்தை இன்றி என் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் அக்காவிற்கு, உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே பல தொழில்சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புவேன்,'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
மாணவி ரியா,'' நான் அசைவ உணவு சாப்பிடமாட்டேன். அதனால், முட்டை இல்லாத பேக்கிங் பொருட்களை தயாரிக்கும் முயற்சி செய்து, அதில் பெற்ற அனுபவம் வாயிலாக, குக்கீஸ் செய்கிறேன். அதன் சுவை பிடித்து பக்கத்து வீட்டினர், கல்லுாரி தோழிகள் கேட்கவே அதையே ஓர் தொழிலாக மாற்றிக்கொண்டேன். மாதம், 10,000 ரூபாய் கிடைக்கிறது. எனக்கான முதலீடு, செலவினங்களை இதில் கவனித்துக்கொள்கிறேன். முதன்முறை சம்பாதித்து என் அம்மாவிடம் கொடுக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி; அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலவில்லை,'' என்றார்.
அதே போன்று, மாணவி திரிஷா மற்றும் உத்ரா கல்லுாரி விடுதி மாணவிகளுக்கு தேவைப்படும் அடிப்படை அவசிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதை விற்பனை செய்து வருமானம் ஈட்டிவருகின்றனர்.
மாணவி யாஷிகா பட்டு நுால் நகைகள் தயாரித்தும், எம்.பி.ஏ., மாணவி ரிப்பனா கலைப்பொருட்களை செய்தும், சந்தியா மெஹந்தி போன்றவற்றை கொண்டு படிக்கும் போதே தொழில் முனைவோராக வருமானம் ஈட்டி சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். பாடங்களை தாண்டி, மாணவர்களின் தொழில்முனைவோர் திறன் மேம்பட உதவி, ஊக்குவித்து வரும் கல்லுாரி நிர்வாகங்களின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியதே.