/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
குப்பையில் கிடைத்த 3 சவரன் நகை; ஒப்படைத்த துாய்மை பணியாளர்
/
குப்பையில் கிடைத்த 3 சவரன் நகை; ஒப்படைத்த துாய்மை பணியாளர்
குப்பையில் கிடைத்த 3 சவரன் நகை; ஒப்படைத்த துாய்மை பணியாளர்
குப்பையில் கிடைத்த 3 சவரன் நகை; ஒப்படைத்த துாய்மை பணியாளர்
ADDED : ஜன 23, 2026 01:18 AM

திருப்பூர்: திருப்பூர் அருகே குப்பையுடன் சேர்த்து கொட்டப்பட்ட 3 சவரன் நகையை, உரியவரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளரை பலர் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர், அவிநாசி ரோடு, இ.பி. காலனியை சேர்ந்தவர் சித்ரா, 51. நேற்று மதியம் 24வது வார்டு கவுன்சிலர் நாகராஜை (ம.தி.மு.க.) சந்தித்து, 'எனது அம்மா குப்பையை துாய்மை பணியாளரிடம் வழங்கும் போது, மூன்று சவரன் நகையையும், சேர்த்து கொடுத்து விட்டார். அதனை மீட்டுத்தாருங்கள்,' என தெரிவித்துள்ளார்.
உடனே, நாகராஜ், அப்பகுதி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் அருண்பாண்டியன், ஹக்கீம் மற்றும் சித்ரா ஆகியோர், இ.பி.காலனி அருகேயுள்ள லட்சுமி தியேட்டர் ரோடு பகுதியிலுள்ள குப்பை சேமிக்கும் இடத்துக்கு சென்று துாய்மை பணியாளர்களிடம் விசாரித்துள்ளனர்.
துாய்மை பணியாளர் எல்லம்மா, 35, என்பவர், சேகரித்து சென்ற காய்கறி கழிவுகளை கீழே கொட்டிய போது, அதில், மூன்று சவரன் நகை இருந்தது. அதை எடுத்து, சித்ராவிடம் வழங்கினார். நகை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியுடன், எல்லம்மாவுக்கு மனப்பூர்வமான நன்றியை சித்ரா தெரிவித்தார். கவுன்சிலர் நாகராஜ் மற்றும் அங்கிருந்தவர்கள் துாய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டினர்.
சித்ரா கூறுகையில்,' பொங்கல் பண்டிகைக்கு பூஜை செய்த போது, நகையை கழற்றி, சுவாமி படம் அருகே வைத்திருந்தேன். படத்துக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை எனது தாயார் அகற்றிய போது, காய்ந்த மாலையுடன், நகையையும் சேர்த்து குப்பையுடன் கொடுத்து விட்டார்,'' என்றார். எல்லம்மாவின் செயலை அறிந்த சக துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் அவரின் நேர்மையை பாராட்டி வாழ்த்தினர்.

