ரயிலில் கிடந்த 12 பவுன் நகை உரிய பெண்ணிடம் ஒப்படைப்பு
ரயிலில் கிடந்த 12 பவுன் நகை உரிய பெண்ணிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 17, 2026 01:13 AM

காரைக்குடி: ரயிலில் தவறவிடப்பட்ட 12 பவுன் தங்க நகை, லேப்டாப்பை மீட்ட காரைக்குடி ரயில்வே போலீசார், உரிய பெண்ணிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் நாஜரேத்பேட்டையைச் சேர்ந்தவர் பர்வதவர்த்தினி 34. இவர், நேற்று செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவகாசியில் இருந்து திருமங்கலத்திற்கு சென்றார். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும்போது லேப்டாப் பேக்கை ரயிலில் தவறவிட்டார். அதில் லேப்டாப், 12 பவுன் தங்க நகை இருந்தது.
பர்வதவர்த்தினி ரயில்வே அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். மதுரை - திண்டுக்கல் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது.
எனவே பேக் தவறவிடப்பட்டது குறித்து காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ரயிலில் கிடந்த பேக்கை கைப்பற்றினர். ரயில்வே இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.ஐ.,க்கள் சையது, தீபா தவறவிட்ட 12 பவுன் நகை, லேப்டாப்பை பர்வதவர்த்தினி இடம் ஒப்படைத்தனர்.
