20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பஸ் சேவை; எம்.எல்.ஏ., முயற்சியால் நிறைவேறியது தேவை
20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பஸ் சேவை; எம்.எல்.ஏ., முயற்சியால் நிறைவேறியது தேவை
UPDATED : செப் 23, 2026 06:11 AM
ADDED : செப் 22, 2026 07:02 PM

காரமடை: காரமடை எத்தப்பன் நகரில் 20 ஆண்டுகளுக்கு பின், த.வெ.க., எம்.எல்.ஏ.,வின் முயற்சியால் மீண்டும் பஸ் சேவை துவக்கப்பட்டது.
காரமடை நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாய கூலி, கட்டட தொழில்தான் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. அதற்கு முன் இருநேரம் பஸ் வசதி இருந்தது.
இப்பகுதி மக்கள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று டி.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் பஸ் ஏற வேண்டி இருந்தது. பல ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என மனு அனுப்பி அலுத்துப்போன மக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., சுனில் ஆனந்திடம் மனு அளித்தனர். எம்.எல்.ஏ.,வின் முயற்சியால் நேற்று முதல் எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகருக்கு அரசு பஸ் வசதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
பஸ் சேவையை எம்.ஏல்.ஏ., சுனில் ஆனந்த் நேற்று துவங்கி வைத்தார். தினமும் காலை, மதியம், மாலை என கோடதாசனூர் செல்லும் பஸ்கள் இவ்வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
எத்தப்பன் நகரை சேர்ந்த முதியவர் வீரசாமி கூறுகையில், உடல்நிலை சரியில்லாவிட்டாலும் 2 கி.மீ., நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டும். காரமடையில் இருந்து ஆட்டோ அழைத்தால், ரூ.60 முதல் ரூ.100 வரை செலவாகும். ஏழை மக்களுக்கு சிரமமாக இருந்தது. இங்கிருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் மக்களும் பஸ் வசதி இன்றி அவதிப்பட்டனர். இரவில் பெரும்பாடு. 20 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பஸ் வசதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
