UPDATED : ஜன 30, 2024 04:19 PM
ADDED : ஜன 30, 2024 12:24 AM

தொண்டாமுத்தூர்;பூலுவபட்டியில், இயற்கை முறை விவசாயத்தில் ஈர்ப்பு கொண்டு, தங்களது தோட்டத்தில் அனைத்தையும் இயற்கையாக மாற்றி, சென்னையை சேர்ந்த அண்ணன் -- - தங்கை அசத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர்கள் சேஷாத்ரி,34 மற்றும் அவரது தங்கை வசுமதி,30. இருவரும் சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு, கோவை, பூலுவபட்டியில், 3 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக முற்றிலும் இயற்கை முறை விவசாயத்தை, செயல்படுத்தி அசத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சேஷாத்ரி மற்றும் வசுமதி தெரிவித்ததாவது:
எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில், பாக்கு மற்றும் தென்னை என, நீண்ட கால பயிர்களை பயிரிட்டுள்ளோம். நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக, செயற்கை உரம் மற்றும் மருந்துகளை தெளித்து வந்தோம்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், மண் வளமிழந்து வருவது தெரியவந்தது. விளைச்சலும் வெகுவாக பாதித்தது. இதனையடுத்து, இயற்கை விவசாயத்தில், ஈடுபாடு ஏற்பட்டு, முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறினோம்.
தோட்டத்தில் விழும், காய்ந்த பாக்கு மற்றும் தென்னை மட்டைகளை ஒரு இடத்தில் சேகரித்து, அது மக்கியதும் கிடைக்கும் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
அதோடு, எங்கள் தோட்டத்தில், வாத்து, மாடு, நாய், கோழி போன்றவையும் வளர்த்து வருகிறோம். இதில், நாட்டு மாட்டின் கோமியத்தை சேகரித்து, போரான், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம் போன்றவற்றை தயார் செய்து, பயிர்களுக்கு தெளித்து வருகிறோம்.
வாத்துகளின் கழிவுகளை, தனியாக தொட்டியில் சேகரித்து, அதனையும் தண்ணீர் வைத்து, உரமாக தெளிக்கின்றோம். இந்த இயற்கை முறை விவசாயத்தால், மீண்டும் மண் வளம் பெற்றுள்ளது.
தற்போது, வழக்கத்தைவிட, விளைச்சல் அதிகரித்துள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 2 டன் பாக்கு அறுவடை செய்து வருகிறோம். இயற்கை விவசாயத்தில், செலவும் குறைவுதான்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இயற்கை முறை விவசாயத்தால், மீண்டும் மண் வளம் பெற்றுள்ளது. தற்போது, வழக்கத்தைவிட, விளைச்சல் அதிகரித்துள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 2 டன் பாக்கு அறுவடை செய்து வருகிறோம். இயற்கை விவசாயத்தில், செலவும் குறைவுதான்.