/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கோவில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பின் வெளிவந்த அத்திவரதர்
/
கோவில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பின் வெளிவந்த அத்திவரதர்
கோவில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பின் வெளிவந்த அத்திவரதர்
கோவில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பின் வெளிவந்த அத்திவரதர்
UPDATED : மார் 01, 2026 07:49 AM
ADDED : மார் 01, 2026 06:30 AM

தஞ்சாவூர்: கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோவில் பாதாள அறையில் இருந்து, 12 ஆண்டுகளுக்கு பின், அத்திவரதர் வெளியே வந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில், சவுராஷ்டிர தர்ம பரிபாலன கமிட்டி நிர்வாகத்தால், 1739ம் ஆண்டு கட்டப்பட்ட வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். 1915ல், பாதாள அறையில் இருந்து, அத்திவரதர் வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன் பின், 98 ஆண்டுகளுக்கு பின், 2013ல், அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் இன்று, 1ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை, அத்திவரதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதற்காக நேற்று மாலை, 1.5 அடி உயரத்தில், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, தைலக்காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது.
விழா நாட்களில், தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்கின்றன. தினமும் காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையும் சுவாமி தரிசனம் செய்ய உகுந்த நேரம் என, சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடதக்கது.

