/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தேசிய துப்பாக்கி சுடுதலில் பெங்களூரு இளைஞர் சாதனை
/
தேசிய துப்பாக்கி சுடுதலில் பெங்களூரு இளைஞர் சாதனை
UPDATED : ஜன 03, 2025 03:10 PM
ADDED : ஜன 02, 2025 08:42 PM

மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெங்களூரை சேர்ந்த 18 வயது இளைஞர் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் அபிஷேக் சேகர், 18. கடந்த 2019ல் துப்பாக்கி சுடும் அகாடமியில் சேர்ந்தார். இவருக்கு ராமசந்திரன் புருஷோத்தம் பயிற்சி அளித்தார்.
இங்கு சேர்ந்த இரண்டு மாதங்களில், கர்நாடக மாநில ரைபிள் சங்கம் சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.
இதில், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில், 'சீனியர், ஜூனியர், யூத் ஆண்கள் பிரிவிலும்; 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவிலும்; 'சீனியர் ஸ்குவாட்', 'ஜூனியர் ஸ்குவாட்' குழு பிரிவில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம்; 'யூத்' ஆண்கள் 'ஸ்குவாட்' பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று, மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 293 மதிப்பெண்கள் பெற்றார்.
இதன் மூலம், கர்நாடகாவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இதற்கு முன் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்திற்கு பின், 2022ல் மீண்டும் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; தசரா போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
கடந்த 2024 டிச., 15 முதல் 30ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 67வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், கர்நாடகா சார்பில் அபிேஷக் சேகர் உட்பட ஏழு பேர் பங்கேற்றனர்.
பத்து மீட்டர் 'ஏர் ரைபிள்' இறுதி போட்டியில், பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற ருத்ராங்க் ஷ் பாட்டீலை தோற்கடித்து, தங்கம் பெற்றார்.
அதுபோன்று ஜூனியர் கலப்பு குழு பிரிவில் திலோத்தமா சென்னுடன் பங்கேற்றும்; 'ஜூனியர் ஆண்கள் பிரிவில் பங்கேற்று தலா ஒரு வெள்ளிப்பதக்கம்; 'சிவில்' பிரிவில் வெண்கல பதக்கம் என மொத்தம் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் பெற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அபிேஷக் சேகர் கூறுகையில், ''அடுத்த ஒலிம்பிக் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -