/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சிறுவன் கன்னத்தில் காயம்; 'பெவி க்விக்' போட்ட நர்ஸ்
/
சிறுவன் கன்னத்தில் காயம்; 'பெவி க்விக்' போட்ட நர்ஸ்
சிறுவன் கன்னத்தில் காயம்; 'பெவி க்விக்' போட்ட நர்ஸ்
சிறுவன் கன்னத்தில் காயம்; 'பெவி க்விக்' போட்ட நர்ஸ்
ADDED : பிப் 05, 2025 09:36 PM

ஹாவேரி ; சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக, 'பெவி க்விக்' போட்ட நர்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ஆடூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் குருகிஷண் அன்னப்பா ஹொசமனி, 7. ஜனவரி 14ம் தேதி, இவர் விளையாடும் போது, எதிர்பாராமல் கன்னத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. மூன்று தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
சிறுவனின் பெற்றோர், உடனடியாக ஆடூரு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த நர்ஸ் ஜோதி, சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதில், 'பெவி க்விக்' பசை போட்டு, பிளாஸ்டர் ஒட்டியுள்ளார்.
இது குறித்து, சிறுவனின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது, நர்ஸ் ஜோதி, 'தையல் போட்டால், சிறுவனின் கன்னத்தில் தழும்பு ஏற்படும்.
எனவே, பெவிக்விக் போட்டேன். எனக்கு தெரிந்த வரை சிகிச்சை அளித்தேன். நீங்கள் பெவி க்விக் போட வேண்டாம் என கூறி இருந்தால், வேறு மருத்துவமனைக்கு அனுப்பி இருப்பேன்' என தெரிவித்துள்ளார்.
நர்ஸ் பெவி க்விக் போடும் வீடியோவை, சிறுவனின் பெற்றோர் மொபைல் போனில் பதிவு செய்து, ஆரம்ப சுகாதார மையத்தின் பாதுகாப்பு கமிட்டியில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட சுகாதார அதிகாரி ராஜேஷ்சுரகிஹள்ளி, நர்ஸ் ஜோதியை வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதற்கு சிறுவனின் பெற்றோர், அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'காயத்துக்கு பெவிக்விக் போட்டு ஒட்டிய நர்சை சஸ்பெண்ட் செய்யாமல், இடம் மாற்றியது சரியல்ல. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.