/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
10 ரூபாய் பிச்சை போட்டவர் மீது பாய்ந்தது வழக்கு
/
10 ரூபாய் பிச்சை போட்டவர் மீது பாய்ந்தது வழக்கு
UPDATED : பிப் 05, 2025 04:33 AM
ADDED : பிப் 05, 2025 02:12 AM

இந்துார் : மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் நகரத்தை, நாட்டிலேயே பிச்சைக்காரர்கள் இல்லாத முதல் நகராக மாற்றுவதற்கு மாநில அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது. பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
லசுடியா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு, சமீபத்தில் பைக்கில் வந்த ஒருவர், அங்கிருந்த பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் பிச்சை போட்டார். இது தொடர்பான காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இதையடுத்து, பிச்சை போட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிச்சை அளித்த குற்றத்துக்காக அவருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கந்த்வா சாலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில், பிச்சை அளித்த ஒருவர் மீது, ஜனவரி 23ல் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்துாரில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக தனி குழு அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், 600 பிச்சைக்காரர்கள் நிவாரண முகாம்களுக்கும், காப்பகங்களுக்கு 100 குழந்தைகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாது, பிச்சை எடுப்பது பற்றிய தகவல் அளிப்போருக்கு, 1,000 ரூபாய் சன்மானமும் அறிவிக்கப் பட்டுள்ளது. நாட்டின் 10 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்றும் திட்டத்தை, மத்திய சமூக நீதி துறை துவக்கிய நிலையில், இந்துாரில் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.