UPDATED : ஏப் 02, 2023 10:39 AM
ADDED : ஏப் 01, 2023 11:06 PM

கடிகாரங்கள், நேரத்தை காட்டுவது மட்டுமின்றி கலை பொக்கிஷமாகவும் வைக்க முடியும் என்பதை மெய்ப்பித்து வருகிறார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேலுசண்முகம்.
அச்சுத்தொழிலில் ஈடுபட்டுள்ள இவரது சேகரிப்பில் உள்ள பல வகையான கடிகாரங்கள், 100 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் ஆச்சரியம்.
கடந்த 20 ஆண்டுகளாக இவர் சேகரித்த கடிகாரங்கள், வீட்டு சுவர் முழுதும் ஆங்காங்கே அழகுற தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது குறித்து சுவாரசியமான தகவல்களை, நம்முடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது:
அழகு, தொழில்நுட்பம், நீண்ட கால உழைப்பு என, எல்லாவிதத்திலும் ஜெர்மன் கடிகாரம் சிறப்பாக இருந்தது. அதற்காக, அங்கே ஒரு ஊரே, கடிகார தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
'டெஸ்க் கடிகாரம்' எனும் பெட்டி கடிகாரத்தை, போகுமிடமெல்லாம் துாக்கிச் சென்று நேரம் பார்க்க பயன்படுத்தி உள்ளனர். பின், சாவி கொடுத்தால் ஓடும் கடிகாரம் வந்தது. தினமும் சாவி கொடுக்க வேண்டும்.
அதில் சோம்பல் வந்த பின், 'பெர்த்டே' மற்றும் 'அனிவர்சரி' கடிகாரம் வந்தது. இந்த கடிகாரங்களுக்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுத்தாலே போதுமானது. அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும்.
இதுபோலவே, கிச்சன் கடிகாரம் தயாரித்தனர். வீட்டு சமையலறையில் மட்டுமே வைத்திருப்பவர். பீங்கானால் ஆன இந்த கடிகாரத்தில் படியும் எண்ணெய் பிசுக்குகளை துடைப்பது சுலபம்.
விமானம் மற்றும் கப்பல் பயணத்தின் போது, அதனதன் அதிர்வுகளை தாங்கும் வகையிலான கடிகாரம் தயாரிக்கப்பட்டது. ஆடம்பரத்தையும், புதுமையும் விரும்புவோருக்காக தயாரிக்கப்பட்டது 'குக்கூ' ரக கடிகாரம். இதில் தான் மணி நேரத்தில் பறவை வந்து கீச்சிடும்.
பணக்காரர்கள் வீட்டில் வரவேற்பறையில் இருப்பது 'கிராண்ட் பாதர்' கடிகாரம். 'பிரண்ட்ஸ்' படத்தில் காட்டப்படுவது இந்த கடிகாரம்தான்.
வீட்டில் 1,000 ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள கடிகாரங்கள் உள்ளன. பழமையான கடிகாரம் எங்கிருந்தாலும், தேடிச் சென்று வாங்கி விடுவேன்.
ஓடாத கடிகாரம் கிடைத்தால், சென்னையில் உள்ள 'வாட்ச் மெக்கானிக்'குகளை அழைத்து வந்து சரிசெய்துவிடுவேன்; 'பிளையிங், பெண்டுலம்' கடிகாரமும் அவற்றுள் சில.
கடிகாரங்கள், மணிக்கொரு முறை எழுப்பும் ஓசையை நிறுத்தலாமே தவிர, குறைக்க முடியாது. இந்த ஓசை தான் நான் கேட்கும் சங்கீதம்.
வாரத்தில் ஒரு நாள் முழுதும், இந்த கடிகாரங்களுக்கு சாவி கொடுக்கவே சரியாக இருக்கும். என் மனைவி ஷோபாவும், இக்கடிகாரங்களை முறையாக பராமரிக்கிறார்.
சேகரிப்பை பார்ப்பது, தொடர்பான விசாரிப்புகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மெயில் முகவரி: gvshanmugam57@yahoo.com
இவ்வாறு வேலு சண்முகம் கூறினார்.
