சாலைகளை சீரமைக்கக் கோரி சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய கவுன்சிலர்
சாலைகளை சீரமைக்கக் கோரி சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய கவுன்சிலர்
ADDED : நவ 19, 2026 06:32 AM

ராமநாதபுரம்: 'ராமநாதபுரத்தில் ரோடு படுமோசம். அதை சீரமைக்க வேண்டும்' எனக்கூறி, தி.மு.க., நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் முன், தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன் சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சி அதிர்ச்சி அளித்தார்.
ராமநாதபுரம் நகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன், தன் வார்டில், பாதாள சாக்கடை திட்டத்தால் சாலைகள் படுமோசமாக இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க கோரியும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து அதிகாரிகளிடம் கெஞ்சினார்.
இதற்கு, 'ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்பதால் சாலை சேதமடைந்துள்ளது. விரைவில் சரி செய்யப்படும்' என, கார்மேகம் தெரிவித்தார்.
அதே கூட்டத்தில், மற்றொரு தி.மு.க., கவுன்சிலரான காளிதாஸ், ''மீண்டும் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என அதிகாரிகள் நினைப்பது போல உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளை சும்மா விடமாட்டோம்,'' என, மிரட்டல் விடுத்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.
