/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆழ்கடலில் திருமணம்; புதுச்சேரி காதல் ஜோடி புதுமை
/
ஆழ்கடலில் திருமணம்; புதுச்சேரி காதல் ஜோடி புதுமை
ADDED : ஜன 23, 2025 07:49 AM

புதுச்சேரி; கடல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி ஆழ்கடலில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர்அரவிந்த், 35. இவர், ஸ்கூபா டைவிங் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது தங்கை தீபீகா, 26, ஸ்கூபா டைவிங் வீராங்கனை. இவரும், புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஜான் பிரிட்டோ, 28, என்பவரும் காதலித்து வந்தனர். நேற்று தங்கள் திருமணத்தை ஆழ்கடலில் நடத்தினர்.
தேங்காய் திட்டு துறைமுகத்தில் இருந்து, 5 கி.மீ., யில், 50 மீட்டர் ஆழ்கடலில்நேற்று காலை 7:30 மணிக்கு, ஸ்கூபா டைவிங் உடையுடன் நீந்தியபடி திருமணம்செய்தனர். கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றி கொண்டனர். 40 நிமிடங்கள் இந்த திருமணம் நடந்தது. ஒரு கேமிராமேன், மூன்று உறவினர்கள் என, ஐந்து பேர் மட்டும் கலந்து கொண்டனர். பாதிரியார் பங்கேற்கவில்லை.
மணமகள் தீபிகா கூறுகையில், 'சென்னையில் கடந்தாண்டு பிப்., 14ம் தேதி, ஜான் பிரிட்டோ பாரா கிளைடிங்கில் பயிற்சிமேற்கொண்டார். நான் கீழே இருந்தேன். திடீரென அவர், 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா' என்ற வாசகத்தை வானில் பறக்கவிட்டு, லவ் புரபோசல் செய்தார். பெற்றோர் சம்மதமும் கிடைத்ததால், கடல் மாசுபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு, ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டோம்,'' என்றார்.