தினமலர் செய்தி எதிரொலி; ஜமாத் அறிவிப்பு பலகை அகற்றம்
தினமலர் செய்தி எதிரொலி; ஜமாத் அறிவிப்பு பலகை அகற்றம்
UPDATED : அக் 08, 2026 06:25 AM
ADDED : அக் 08, 2026 05:37 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் மாலை 6:00 மணிக்குள் வெளியூர் வியாபாரிகள் ஊரிலிருந்து வெளியேற வேண்டும் என ஜமாத் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது சர்ச்சையானது. தினமலர் செய்தி எதிரொலியாக வருவாய்த்துறையினர் அந்த பலகையை அகற்றினர்.
திருப்பாலைக்குடியில் ஐக்கிய முஸ்லிம் சுன்னத்வல் ஜமாத் சார்பில், பொது இடத்தில் 'வியாபாரிகள் கவனத்திற்கு' என்ற தலைப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில், “வெளியூர் வியாபாரிகள், கொரியர் சேவை புரிபவர்கள், தண்ணீர் வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே ஊருக்குள் வரவேண்டும். மாலை 6:00 மணிக்குள் வெளியூர் வியாபாரிகள் ஊரிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும்,” என அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு ஹிந்துக்கள் உட்பட பல்வேறு சமூகத்தினரும் வசிக்கும் நிலையில், ஜமாத் சார்பில் தன்னிச்சையாக வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு பலகைக்கு எதிர்ப்பு கிளம்பியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். அறிவிப்பு பலகையின் படத்துடன் தினமலர் நாளிதழில் நேற்று இதுகுறித்த செய்தி வெளியானது.
இதையடுத்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதன் உத்தரவின் பேரில், திருப்பாலைக்குடி வி.ஏ.ஓ., அருள் அரவிந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் முன்னிலையில், ஊராட்சி பணியாளர்கள் ஜமாத்தின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகையை அகற்றினர்.
