தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசு: திமுக - எம்.எல்.ஏ., அசத்தல்
தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசு: திமுக - எம்.எல்.ஏ., அசத்தல்
ADDED : அக் 21, 2026 12:20 AM

பெரம்பலுார்: மண்ணச்சநல்லுார் தி.மு.க., -- எம்.எல்.ஏ., கதிரவன், 51, தன் தந்தை சீனிவாசனின், 81வது பிறந்த நாளுக்கு ஹெலிகாப்டர் வாங்கி பரிசளித்துள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம், புதுநடுவலுாரை சேர்ந்தவர் கதிரவன். இவர், 2021 முதல் தற்போது வரை திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தன் பெற்றோர் பெயரில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை, மருத்துவ கல்லுாரிகள், சர்க்கரை ஆலை, சிட்பண்ட்ஸ் உட்பட, பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறார்.
இவரது அப்பா சீனிவாசனின், 81வது பிறந்த நாள், கடந்த 7ல் பெரம்பலுாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில், வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, 30 ஆயிரம் பேருக்கு அசைவ அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த விழாவில், கதிரவன், தன் அப்பாவுக்கு, 5 பேர் அமரும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை, பிறந்த நாள் பரிசாக வழங்கினார். இந்த ஹெலிகாப்டரில், சீனிவாசன் தற்போது, சமயபுரம், பழனி, கொடைக்கானல், ஊட்டி, கேரளா போன்ற நகரங்களுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
