/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கார் ஓட்டி பாடம் நடத்தும் ஆசிரியை
/
கார் ஓட்டி பாடம் நடத்தும் ஆசிரியை
UPDATED : ஜன 02, 2025 08:20 PM
ADDED : டிச 29, 2024 11:01 PM

கர்நாடகா - கேரளா மாநில எல்லையில் உள்ளது தட்சிண கன்னடா மாவட்டம். இங்கு சுள்ளியா தாலுகாவில் உள்ளது கோல்சார் கிராமம். தாலுகா தலைநகரான சுள்ளியாவில் இருந்து, இந்த கிராமம் 20 கி.மீ., துாரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் அரசு துவக்க பள்ளி உள்ளது.
கோல்சார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் இந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனால் பள்ளிக்கு வருவதற்கு சரியான பஸ் வசதி இல்லை.
இதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியிடம் எடுத்து பேசி, மாணவ - மாணவியரை அழைத்து வர, அரசு சார்பில் ஆம்னி காரை ஆசிரியர்கள் வாங்கினர்.
கார் வாங்கியாச்சு... ஓட்ட டிரைவர் வேண்டுமே... அவருக்கும் தனியாக சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று ஆசிரியர்கள் யோசித்தனர். இந்நிலையில், 'பள்ளியின் 3ம் வகுப்பு ஆசிரியை ஜலஜாக் ஷி, எனக்கு கார் ஓட்ட தெரியும்.
நான் மாணவ - மாணவியரை தினமும் அழைத்து வருகிறேன்' என்று கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவ - மாணவியரை 'பிக்கப் மற்றும் 'டிராப்' செய்யும் வேலையை செய்கிறார்.
இதுகுறித்து ஜலஜாக் ஷி கூறியதாவது:
இன்றைய கால கட்டத்தில் கல்வி மிகவும் முக்கியம். பஸ் வசதி இல்லை என்பதற்காக மாணவ - மாணவியர் கல்வி பாழாகிவிட கூடாது.
இதனால் கார் ஓட்டி சென்று மாணவ - மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருகிறேன். வீட்டிலும் விடுகிறேன். எனது டிரைவிங் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை காரில் அனுப்பி வைக்கின்றனர்.
தினமும் காலை 7:00 மணிக்கு சுள்ளியாவில் இருந்து, காரை ஸ்டார்ட் செய்கிறேன். சுள்ளியா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மாணவ - மாணவியரை முதலில் அழைத்து வருகிறேன்.
பின், பள்ளியில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் வசிப்பவர்களை அழைத்து வருகிறேன். இது எனக்கு கூடுதல் சுமை என்று பலர் பேசுகின்றனர். மாணவ - மாணவியர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை செய்கிறேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. மகிழ்ச்சியாக செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.