/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆம்புலன்ஸ் ஓட்ட ஆசைப்படும் பெண் ஆட்டோ டிரைவர்
/
ஆம்புலன்ஸ் ஓட்ட ஆசைப்படும் பெண் ஆட்டோ டிரைவர்
UPDATED : டிச 10, 2024 03:59 PM
ADDED : டிச 09, 2024 06:39 AM

பெண்கள் நினைத்தால் இந்த காலத்தில் முடியாதது எதுவும் இல்லை. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
மனதில் வைராக்கியத்துடன் பெண்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதில் வெற்றி காணாமல் விடவே மாட்டார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், ஆட்டோ ஓட்டி அசத்துகிறார். அவரை பற்றி பார்க்கலாம். பெங்களூரின் இந்திராநகரை சேர்ந்தவர் ஆஷா, 38. இவர், காக்கி சட்டை அணிந்து நகரில் ஆட்டோவில் வலம் வந்து அசத்துகிறார்.
ரூ.8,000 சம்பளம்
தனது ஆட்டோ ஓட்டும் பயணம் குறித்து கூறியதாவது: எனக்கு திருமணம் முடிந்து விட்டது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் கல்லூரியில் படிக்கிறார்; மகன் பள்ளி செல்கிறார். எனது மகன் 9 மாத கை குழந்தையாக இருந்த போது, எங்களை கைவிட்டு கணவர் எங்கேயோ சென்றுவிட்டார். அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்பதால், வீட்டு வேலைக்கு சென்றேன். மாதம் 8,000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதில் 5,000 ரூபாய் வீட்டு வாடகையாக கொடுத்தேன்.
மீதம் உள்ள 3,000 ரூபாயில் குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனது உறவினரான அய்யப்பா என்பவர் ஆட்டோ ஓட்டுகிறார். அவரிடம் சென்று எனக்கும் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுங்கள் . நானும் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறேன் என்று கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்து, எனக்கு இரண்டு வாரம் பயிற்சி அளித்தார்.
ஆட்டோ ஓட்ட தெரிந்த பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று லைசென்ஸ் வாங்கினேன். பின், எனது தாயிடம் இருந்து 30,000 ரூபாய் கடன் வாங்கி, 'செகண்ட் ஹேண்ட்' ஆட்டோ வாங்கினேன். அந்த ஆட்டோ அடிக்கடி பழுது ஆனது. அதை சரி செய்யவே ஒரு தொகையை செலவழித்தேன்.
பின், சிலரின் உதவியுடன் புதிதாக ஆட்டோ வாங்கினேன். நான் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தபோது எனது உறவினர்கள் எதிர்ப்பும், கிண்டலும் செய்தனர். இதையெல்லாம் பார்த்தால் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது என்று நினைத்தேன். கிண்டல் செய்வோர் யாரும் நமக்கு உதவி செய்ய போவதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். நான் பெண் என்பதால் சரியாக ஆட்டோ ஓட்டுவேனா என்பதில், சில பயணியருக்கு சந்தேகம் இருந்தது. சிலர் எனது ஆட்டோவில் ஏறாமல், பக்கத்தில் ஆண்கள் ஓட்டும் ஆட்டோவில் ஏறி செல்வர். இதை பார்க்கும்போது மனதிற்கு வருத்தமாக இருக்கும்.
அமைச்சர் கவுரவிப்பு
நாளடைவில் எனது ஆட்டோவிலும் நிறைய பேர் பயணிக்க ஆரம்பித்தனர். தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறேன். ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
ஒரு நேரத்தில் சாப்பிட கூட பணம் இன்றி கஷ்டப்பட்டு இருக்கிறேன். இப்போது என்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். எனது கணவர், இப்போது வந்தால், கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
கஷ்டமோ, நஷ்டமோ அவர் எங்களுடன் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு எனது ஆட்டோவில் ராஜேஸ்வரி என்பவர் பயணம் செய்தார். பெண்கள் அமைப்பில் இருப்பதாக கூறினார். எனது மொபைல் நம்பரையும் வாங்கி சென்றார்.
அந்த பெண்கள் அமைப்பு நடந்த சார்பில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கலந்து கொண்டு என்னை கவுரவித்தார். வரும் காலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஒரு உயிரை காப்பாற்றும் வாகனம் என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்ட எனக்கு ஆசை. கண்டிப்பாக ஒருநாள் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவேன்.
இவ்வாறு அவர் கூறினார். - --நமது நிருபர் - -