பணிமனையில் டயர்கள் இன்றி நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்கள்
பணிமனையில் டயர்கள் இன்றி நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்கள்
ADDED : நவ 25, 2026 06:07 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி உள்ளிட்ட இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு பணிமனைகளிலும், 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் உட்பட, 90க்கும் அதிகமான பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், அனைத்து பணிமனைகளிலும், இரண்டு முதல் ஐந்து பஸ்கள் வரை டயர்கள் இல்லாமல், கற்களை கொண்டு முட்டுக்கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, காரைக்குடி மண்டல ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து சம்மேளன செயலர் சுப்பிரமணியன் கூறுகையில், ''இம்மண்டலத்தில், 10 பணிமனைகள் உள்ள நிலையில், ஒவ்வொன்றிலும், மூன்று பஸ்கள் வரை டயர்கள் இன்றி நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுதும் இதே நிலை உள்ளது.
பஸ்கள் எப்.சி., போகும் போதும் மற்றும் டயர் பஞ்சர் ஆகி சேதமடையும் போதும் மற்ற பஸ்சில் இருந்து, டயர்களை கழற்றி மாட்ட கூறுகிறார்கள். இம்மண்டலத்தில் மட்டும், 420 பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், 200 பேர் மட்டுமே உள்ளனர். கூடுதல் பணிச்சுமையால், ஊழியர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்,'' என்றார்.
