UPDATED : ஜன 02, 2025 08:23 PM
ADDED : டிச 29, 2024 06:47 AM

அரசு பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின் தொட்டதத்தமங்களா கிராமத்தில், புதுமையான யுக்தியை கிராம பஞ்சாயத்து கையாண்டுள்ளது.
அரசு பள்ளிகள் என்றால், முகத்தை சுழிப்போரே அதிகம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் மட்டுமே, வேறு வழியின்றி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். கடன்பட்டாவது தனியார் பள்ளிகளில், பிள்ளைகளை சேர்ப்போரே அதிகம்.
அரசு பள்ளிகளில், கல்வி தரமாக இருக்காது. அடிப்படை வசதிகள் இருக்காது. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளை மக்கள் புறக்கணிக்கின்றனர்.
இதற்கிடையில் அரசு பள்ளிக்கு, மாணவர்களை ஈர்க்க புதிய வழிமுறையை கையாண்டுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், விஜயபுராவின், மன்டிபெலே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டதத்தமங்களா கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.
இதற்கு முன்பு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வெறும் எட்டு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். பள்ளி மூடும் கட்டத்துக்கு வந்தது. இதை கண்டு வருத்தமடைந்த பழைய மாணவர்கள், பள்ளியை சீரமைக்க முடிவு செய்தனர்.
அனைவரும் சொந்த பணத்தை செலவிட்டு, பள்ளி இடித்து புதிதாக கட்டினர். சுற்றிலும் பாதுகாப்புக்காக காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. கட்டடத்தின் வெளிப்புறத்தில் ரயில் ஓவியம் வரைந்துள்ளனர்.
தொலைவில் இருந்து பார்த்தால், ரயில் நின்றிருப்பதை போன்றே தென்படும். இதை கண்டு சிறார்கள் குஷியடைந்து, ஆர்வத்தோடு கல்வி பயில வருகின்றனர். மாணவர் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.
பள்ள வளாகத்தில் சிறார்கள் விளையாட, விசாலமான மைதானம் உள்ளது. இங்கு உடற் பயிற்சி செய்வதற்காக உபகரணங்கள் உள்ளன. கழிப்பறைகள் கட்டப்பட்டன.
தற்போது பள்ளியின் ஒரு அறையை, கம்ப்யூட்டர் அறையாக மாற்றும் பணி நடக்கிறது. கல்விக்கு தகுந்த சூழ்நிலை இருப்பதால், பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் ராஜு கூறியதாவது:
பழைய மாணவர்களின் அக்கறை மற்றும் முயற்சியால், பள்ளிக்கு புதுப்பொலிவு கிடைத்தது. மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கிறது. தொடக்க பள்ளியிலேயே கம்ப்யூட்டர் கற்பிக்க தயாராகிறோம்.
பள்ளி வளாகத்தில் விசாலமான மைதானம் உள்ளது. இங்கு விவசாய தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
பள்ளியில் மதிய உணவுக்கு தேவையான காய்கறிகளை தோட்டத்தில் விளைவிப்பது, எங்களின் நோக்கமாகும். ஆனால் இங்கு தண்ணீர் வசதி இல்லை. பள்ளியில் தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும். சிறார்களுக்கு குடிநீர் வினியோகிப்பது கஷ்டமாக உள்ளது.
பள்ளிக்கு தனி குழாய் பொருத்தினால், சிறார்களுக்கு குடிநீர் வழங்க, தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச உதவியாக இருக்கும். இதுகுறித்து, கிராம பஞ்சாயத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -