/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கடினமாக விளையாடினால்... சுலபமாக படிக்கலாம்!
/
கடினமாக விளையாடினால்... சுலபமாக படிக்கலாம்!
UPDATED : ஜன 03, 2025 03:10 PM
ADDED : ஜன 02, 2025 08:41 PM

பொதுவாக பள்ளிகளில் படிப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு அளிக்கப்படுவதில்லை. இதற்கு ஏதிர்மாறாக விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் பள்ளியை பற்றி உங்களுக்கு தெரியுமா.
எதிரொலி
பள்ளிகளில் விளையாட்டு வகுப்பு வரும் போது மாணவர்கள் உற்சாகத்துடன் இருப்பர். ஆனால், சரியான நேரத்தில் கணக்கு டீச்சர் வந்து, விளையாட்டு வகுப்பை, கடன் வாங்கி பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். விளையாட்டு வகுப்பு எல்லாம் முக்கியமா என ஏளனம் பேசும் நிலை தான் பெரும்பாலான பள்ளிகளில் இன்றும் உள்ளது.
மாணவர்களின் அஸ்திவாரமே பள்ளி படிப்பு தான். ஆனால், பள்ளி படிப்பில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காததை பார்த்து, அவர்களுக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் ஏற்படாமல் போகிறது. இதன் விளைவு, ஒலிம்பிக் போட்டிகளிலும் எதிரொலிக்கிறது.
மாணவர்களுக்கு படிப்பில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டிற்கும் அளிக்கும் பள்ளி தான் ' தி ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்'. 'கடினமாக விளையாடு... சுலபமாக படி' என்ற நோக்கத்துடன் பள்ளி செயல்படுகிறது.
இந்த பள்ளி ராம்நகர், கனகபுரா தாலுகாவில் உள்ள வதேரஹள்ளியில் உள்ளது. இங்கு 5ம் வகுப்பு முதல் பி.யு., கல்லுாரி வரை பாடமும், விளையாட்டும் கற்றுத் தரப்படுகிறது. கன்னடா, ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பாடம் நடத்தப்படுகிறது. மாணவ - மாணவியர் தங்கி படிப்பதற்கு விடுதி வசதியும் உள்ளது.
மைதானங்கள்
பள்ளி வளாகத்தில் கட்டடங்களை விட, விளையாட்டு மைதானங்கள் பெருமளவில் உள்ளன. இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கேரம், டென்னிஸ், சதுரங்கம், நீச்சல் போன்ற பல விளையாட்டு நிபுணர்களால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளியில் சேர்ந்தவுடனே மாணவ - மாணவியருக்கு விருப்பமான விளையாட்டில் சேர்க்கப்பட்டு தினமும் பயிற்சிகள் அளிக்கப்படும். விளையாட்டில் தான் மாணவர்கள் அதிக நேரம் செலவிடுவர். வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்துகின்றனர்.
மனப்பாடம் செய்யும் முறைக்கு மாற்றாக, 'செய்முறை பயிற்சி வகுப்பு' மூலம் எளிய முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. கல்வியுடன் சேர்த்து தினமும் பயிற்சிகள் அளிக்கப்படுவதால், எதிர்காலத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக வருவர் என பள்ளி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களிடம் ஒழுக்கம், உடல் வலிமை இருக்கும். உடலும், மனமும் எளிதில் சோர்வு அடையாது. இதனால், அவர்கள் படிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்த முடியும். 'நாங்கள் மாணவர்களின் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், அவர்களை ஊக்குவிக்கிறோம்' என தி ஸ்போர்ட்ஸ் ஸ்கூலின் இயக்குனர் சங்கர் கூறுகிறார்.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் பி.இ.டி., எனும் விளையாட்டு வகுப்பில் ஆவது, மாணவ - மாணவியரை விளையாட அனுமதித்து ஊக்கப்படுத்தினால், அவர்கள் சாதனையாளராக வெல்வது நிச்சயம்.
- நமது நிருபர் -