பிறப்பு சான்றிதழ் வழங்க மாநகராட்சிக்கு 40 நாள் ஆகிறது: ஆன்லைனுக்கு மாறியும் ஒழியாத லஞ்சம்
பிறப்பு சான்றிதழ் வழங்க மாநகராட்சிக்கு 40 நாள் ஆகிறது: ஆன்லைனுக்கு மாறியும் ஒழியாத லஞ்சம்
UPDATED : மே 29, 2026 11:24 AM
ADDED : மே 29, 2026 02:55 AM

கோவை : கோவை நகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால், அருகில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்று, விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழில் வர வேண்டிய குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். அம்மா அல்லது அப்பா நேரில் வந்து பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும்.
குழந்தை பிறந்த மருத்துவமனையில் இருந்து வந்த தகவலை வார்டு சுகாதார ஆய்வாளர் சரி பார்த்து, ஒப்புதல் வழங்குவார். உடனே, ஆன்-லைனில் டிஜிட்டல் சான்றிதழ் பதிவேற்றப்படும். பெற்றவர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். இதுதான் நடைமுறை. இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் இதே வழி தான்.
சில சமயம் பிறப்பு, இறப்பு சான்றிதழில் எழுத்துப்பிழை இருக்கும். பெற்றோர் அதை கவனிக்காமல் இருக்கலாம். குழந்தையை பள்ளியில் சேர்க்க போனதும் தவறு தெரிந்து விடும். பிழையான பிறப்பு சான்றிதழ் என்று கூறி, குழந்தைக்கு அட்மிஷன் தர மாட்டார்கள்.
சான்றிதழில் பிழைகளை திருத்தி தருவது, முகவரி மாற்றி தருவது போன்ற வேலை இருந்தால், மாநகராட்சியின் பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகத்தில் காட்டி ஒரு விண்ணப்பம் கொடுத்தால், பதிவேட்டை சரிபார்த்து, தவறை திருத்தி கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. இது சில நிமிடங்களில் முடிகிற வேலை. ஆனால், முடியாது.
”நீங்க போங்க; வீட்டுக்கு கூரியர்ல அனுப்புவோம்” என்கின்றனர். கூரியர் வரும்போது வீட்டில் ஆள் இல்லை என்றால், மாநகராட்சிக்கே திரும்பி வரும். அது யாருக்கு சொந்தமானது என்று பதிவேட்டை பார்த்து, போன் போட்டு அம்மா அல்லது அப்பாவை நேரில் வரவழைத்து கொடுக்கலாம். ஆனால், கொடுப்பதில்லை. திரும்பி வந்த கூரியர் கடிதம் ஓரங்கட்டி வைக்கப்படுகிறது.
இது தெரியாமல் வீட்டுக்கு இன்னும் சான்றிதழ் வரவில்லையே என்கிற பதைபதைப்பில் பெற்றோர் இருக்கின்றனர். சமீபகாலமாக பிறப்பு சான்றிதழ் வழங்க 40 நாட்கள் வரை காக்க வைக்கின்றனர்.
இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு போனாலும், ஏதாவது ஒரு ஆவணம் இல்லை என்று கூறி, திருப்பி அனுப்புகின்றனர்.
வீடு சென்று ஆவணம் எடுத்து வந்து கொடுத்தால், அதன் பிறகு ஆன்-லைனில் அந்த சான்றிதழை பதிவேற்ற இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகள் ஊழியர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றப்படும்.
அட்மிஷனுக்கு பிறப்பு சான்றிதழ் எப்படியோ, அது போல இன்சூரன்ஸ், பத்திரப்பதிவு போன்ற முக்கிய வேலைகளுக்கு இறப்பு சான்றிதழ் அவசியம். ஆகவே, ஏழை, நடுத்தர மக்கள் வேறுவழியின்றி, எவ்வளவு கேட்டாலும் கண் கலங்க கொடுத்து விட்டு, சான்றிதழை வாங்கி செல்கின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நமது நிருபர் இதை விவரித்து, என்ன செய்ய போகிறீர்கள்? என்று கேட்டார். அவர் பொறுமையாக, ''நானே போய் விசாரித்து ஆய்வு செய்கிறேன். விண்ணப்பங்கள் நிலுவை இருந்தால், உடனே பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
