கோவில்பட்டி கடலை மிட்டாய் 25 சதவீதம் விலை உயர்வு
கோவில்பட்டி கடலை மிட்டாய் 25 சதவீதம் விலை உயர்வு
UPDATED : ஆக 26, 2026 05:28 PM
ADDED : ஆக 26, 2026 03:05 AM

துாத்துக்குடி: கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை, 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனி சுவை உண்டு. இங்கு, 120 கடலை மிட்டாய் நிறுவனங்களில், 3, 000 பேர் பணிபுரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் புவிசார் குறியீடு பெற்றதை தொடர்ந்து, ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடலை மிட்டாய் உற்பத்திக்கு தேவைப்படும் வேர்க்கடலை, வெல்லம், ஏலக்காய் போன்ற மூல பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் விலையேற்றம் காரணமாக, கடலை மிட்டாய் விலை, 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோ வில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலர் கண்ணன் கூறுகையில், ''த ற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 270 ரூபாயாக விலை உயர்த்தப்படுகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயை, தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் கோவில்பட்டி கடலை மிட்டாயை விற்க அனுமதி வழங்க வேண்டும்,'' என்றார்.
