வாகனங்கள் நடு வழியில் பஞ்சரானால் நோ டென்ஷன் : தர்மபுரியில் பறந்து வரும் நடமாடும் பஞ்சர் கடை
வாகனங்கள் நடு வழியில் பஞ்சரானால் நோ டென்ஷன் : தர்மபுரியில் பறந்து வரும் நடமாடும் பஞ்சர் கடை
ADDED : பிப் 14, 2011 02:18 AM

தர்மபுரி: தர்மபுரி மற்றும் சுற்றியுள்ள பகுதியில், வாகனங்கள் பஞ்சரானால், மொபைல்போனில் தொடர்பு கொண்டால், வாகனம் இருக்கும் இடத்துக்கு சென்று பஞ்சர் போடும், நடமாடும் பஞ்சர் கடை தர்மபுரியில் வலம் வருகிறது.சாலைகளில் செல்லும் வாகனங்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்குவது டியூப் பஞ்சர்.
நான்கு சக்கர வாகனங்களில், 'செட்பினி' டயர்கள் வைத்திருந்தாலும், சொந்தமான வாகனங்கள் ஓட்டுவோருக்கு அதை கழற்றி மாட்டுவது சிரமம்.
லாரி, வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தாங்கள் செல்லும் ஊருக்கு அருகில் உள்ள கிராம பகுதியில் பஞ்சராகி நின்றால், மணிக்கணக்கில் காத்திருந்து பஞ்சர் ஒட்டும் கடையை தேடி சென்று, மெக்கானிக்கை அழைத்து வந்து பஞ்சர் போட்டு, ஊர் போய் செல்வதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.இரவு நேரம் என்றால், சொல்லவே வேண்டாம். பஞ்சர் கடைகள் இருப்பதில்லை. இதனால், குடும்பத்தினருடன் நடுவழியில் மாட்டிக்கொள்ளும் பலர், பல்வேறு தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும்.இதே போல், நகரப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், காலை நேரத்தில் அலுவலகத்துக்கு செல்லும் போது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில், இரு சக்கர வாகனங்கள் பஞ்சராகி போனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு டென்ஷன் ஏறும்.வாகன தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்கள் பஞ்சராகும் பிரச்னையால் தேவையற்ற டென்ஷனை குறைக்கும் வகையில், தர்மபுரியில் நடமாடும் பஞ்சர் கடை வலம் வரத்துவங்கியுள்ளது.
தர்மபுரியை அடுத்த தொப்பூரை சேர்ந்தவர் சவுகத்அலி, தர்மபுரி குப்பாண்டி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர்கள் இருவரும் டிரைவராக இருந்து மெக்கானிக் தொழிலுக்கு வந்தவர்கள்.இருவரும் டிரைவராக இருந்த காலங்களில் வெகு தூரத்துக்கு லாரிகளில் செல்லும் போது, வழியில் லாரி பஞ்சராகி அதை சரி செய்ய பல மணி நேரம் காத்திருந்த அவஸ்தையால், நடமாடும் பஞ்சர் கடை வைக்கும் எண்ணத்துக்கு தள்ளப்பட்டனர். 20 ஆண்டாக இத்தொழிலில் இருந்த போதும், தனியாக நடமாடும் கடை வைக்கும் எண்ணம் தற்போது இவர்களுக்கு நிறைவேறியுள்ளது.இதற்காக தயார் செய்துள்ள வேனில் பஞ்சர் போடுவதற்கு உரிய அனைத்து பொருட்களையும் வைத்துள்ளனர். இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை, பஞ்சரானால், மொபைல்போனில் அழைத்தால் போதும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பஞ்சர் போட்டு, வாகன ஓட்டிகளின் தேவையற்ற டென்ஷனை குறைத்து வருகின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள, 15 கி.மீ., தூரத்துக்கு இவர்களது பயணம் அமைந்துள்ளது. நகரப்பகுதி மற்றும், 5 கி.மீ., தொலைக்குள் சென்று பஞ்சர் போட வேனில் சென்றாலும், டீசல் கட்டணம் வசூலிப்பதில்லை. 5 கி.மீ., தூரத்துக்கு மேல் என்றால், கி.மீ., ,3 ரூபாய் டீசல் கட்டணம் வசூலிக்கின்றனர். நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு பஞ்சருக்கு, 40 முதல் 50 ரூபாய் வரை, பஞ்சர் கட்டணமும், இரு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது குறித்து மெக்கானிக் சவுகத்அலி கூறியதாவது:வாகனங்களில் செல்வோர் சாலைகளில் பஞ்சராகி, பஞ்சரை சரி செய்ய கடை தேடி அழைவதை பார்த்து, சேவை எண்ணத்தோடு நடமாடும் பஞ்சர் கடை துவங்கியுள்ளோம். குறைந்த கட்டணமே வசூலிக்கிறோம். 24 மணி நேரமும் எங்களை, மொபைல்போன் 99947 - 89647, 90428 - 46577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் அங்கு இருப்போம், என்றார்.
