/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரூ.12.86 கோடி வரி கட்டும்படி அப்பாவி பெண்ணுக்கு நோட்டீஸ்
/
ரூ.12.86 கோடி வரி கட்டும்படி அப்பாவி பெண்ணுக்கு நோட்டீஸ்
ரூ.12.86 கோடி வரி கட்டும்படி அப்பாவி பெண்ணுக்கு நோட்டீஸ்
ரூ.12.86 கோடி வரி கட்டும்படி அப்பாவி பெண்ணுக்கு நோட்டீஸ்
ADDED : செப் 16, 2025 12:34 AM

துாத்துக்குடி; துாத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு 12.86 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினம், பாக்யாநகரை சேர்ந்த ஜெயபாலன் மனைவி கிளமென்ஸி, 47. இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் ஜெயபாலன் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், மாதந்தோறும் கொடுக்கும் பணத்தை வைத்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன்.
எனக்கு துாத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், 'கடந்த 2016 - -17 மற்றும் 2017 - -18 ஆகிய நிதியாண்டுகளில் ஏற்றுமதி தொழில் செய்த வகையில், 12 கோடியே 86 லட்சத்து 4,643 ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும்' என, தெரிவித்திருந்தனர்.
மேலும், என் பெயரில் உள்ள இரண்டு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டால், அதிகாரிகள் உரிய பதில் கூற மறுக்கின்றனர். 'பான் கார்டை யாரிடமாவது கொடுத்தீர்களா?' என, என்னிடமே திருப்பி கேள்வி கேட்கின்றனர்.
இதேபோல, 39 பேருக்கு தவறுதலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த தொழிலும் செய்யாமல் ஏழ்மையில் இருந்து வரும் எனக்கு, 12 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி என நோட்டீஸ் அனுப்பி இருப்பது வேடிக்கையாக உள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும். முடக்கம் செய்யப்பட்டுள்ள என் இரண்டு வங்கி கணக்குகளையும் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.