சர்வதேச தலைமைத்துவ விருதுக்கு பேராசிரியர் வின்சென்ட் தேர்வு
சர்வதேச தலைமைத்துவ விருதுக்கு பேராசிரியர் வின்சென்ட் தேர்வு
UPDATED : செப் 03, 2026 05:34 AM
ADDED : செப் 03, 2026 01:09 AM

சென்னை:கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப நிர்வாகம், சமூக மேம்பாடு ஆகிய துறைகளில், சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு, தென்கிழக்கு ஆசிய வேளாண் தொழில்நுட்பக் கழகம் சார்பில், 'அவுட்ஸ்டேண்டிங் லீடர்ஷிப்' எனும் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. இவ்விருது சர்வதேச அளவில் நடக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மாநாட்டில் வழங்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டிற்கான தலைமைத்துவ விருதுக்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் பேராசிரியர் வின்சென்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிச., 11 முதல் 14ம் தேதி வரை, நான்கு நாட்கள் வியட்நாமில் நடக்க உள்ள, 14வது சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மாநாட்டில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
பேராசிரியர் வின்சென்ட், இதுவரை 137 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அரசின் விஞ்ஞானி விருது, மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
