/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பாத பூஜை செய்து மரியாதை; பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆசி
/
பாத பூஜை செய்து மரியாதை; பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆசி
பாத பூஜை செய்து மரியாதை; பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆசி
பாத பூஜை செய்து மரியாதை; பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆசி
UPDATED : ஜன 03, 2025 03:11 PM
ADDED : ஜன 02, 2025 08:46 PM

ஷிவமொக்கா; ஆங்கில புத்தாண்டு தினத்தில், 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஆசிர்வதித்தது பரவசத்தை ஏற்படுத்தியது.
ஷிவமொக்கா, அனுப்பினகட்டேவில் உள்ளது ராமகிருஷ்ணா ஆங்கில வழி குருகுல பள்ளி. இந்த பள்ளியில் ஆங்கில புத்தாண்டு தினம் வித்தியாசமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுவதற்கு பதிலாக, பெற்றோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நிகழ்ச்சியை நடத்தினர்.
பள்ளி மைதானத்தில் பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ -  மாணவியரின் பெற்றோர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டனர். பெற்றோரின் பாதங்களை தட்டில் வைத்து மாணவ - மாணவியர் புனித நீரால் கழுவினர். இதன்பின், கால்களில் மஞ்சள், குங்குமம், விபூதி வைத்தனர். பூக்களால் பூஜை செய்து, ஊதுவத்தி காண்பித்து, பாதங்களில் விழுந்து வணங்கினர்.
இதை பெற்றோர் தங்களது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர். மாணவ - மாணவியரும் பாத பூஜை செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மொத்தம் 800க்கும் மேற்பட்டோர், தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து வணங்கினர். பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை ஆசிர்வாதம் செய்து பரவசத்தை ஏற்படுத்தினர்.
இந்த பாத பூஜை வைபவம், கடந்த 20 ஆண்டுகளாக பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் விளையாட்டு, கல்வி என சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்வு குறித்து, பள்ளியின் முதல்வர் ஷோபா வெங்கடரமணா கூறுகையில், ''முதியோர் இல்லங்களில் பெற்றோர் சேர்க்கப்படுவது அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம் பிள்ளைகளுக்கு பெற்றோரின் மீதான பாசம், மரியாதை இல்லாததே. இது போன்ற நிலையை மாற்றுவதற்கும், பெற்றோரின் மீதான மரியாதை, பாசத்தை அதிகப்படுத்துவதற்கும், பாத பூஜை நிகழ்வு, 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது,'' என்றார்.

