/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'நான் முதல்வன்' திட்டத்தில் உதவித்தொகை: பீடி தொழிலாளி மகள் ஐ.ஏ.எஸ்., ஆகிறார்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் உதவித்தொகை: பீடி தொழிலாளி மகள் ஐ.ஏ.எஸ்., ஆகிறார்
'நான் முதல்வன்' திட்டத்தில் உதவித்தொகை: பீடி தொழிலாளி மகள் ஐ.ஏ.எஸ்., ஆகிறார்
'நான் முதல்வன்' திட்டத்தில் உதவித்தொகை: பீடி தொழிலாளி மகள் ஐ.ஏ.எஸ்., ஆகிறார்
ADDED : மே 03, 2024 04:34 AM

சென்னை: தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெற்று படித்த பீடித் தொழிலாளி மகள் இன்பா, மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்த அரசு செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா. இவர் பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்தார். ஏற்கனவே, இரண்டு முறை மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை.
851வது இடம்
எனினும் விடாமுயற்சியுடன் மூன்றாம் முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்; அகில இந்திய அளவில், 851வது இடம் பெற்றுள்ளார். இவர், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை பெற்று, இத்தேர்வுக்கு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, மாதம் 25,000 ரூபாய் உதவித்தொகை பெற்றார். நான் முதல்வன் திட்டம் வழியே கிடைத்த உதவித் தொகையால், பொருளாதார தேவை குறித்த கவலையின்றி, அவரால் முழு கவனத்துடன் படித்து வெற்றி பெற முடிந்தது.
படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை; முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டை தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக அவரது வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.
'குரூப் - 1' தேர்வு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 95 பணியிடங்களுக்கான 'குரூப் - 1' தேர்வுகள் அறிவிப்பு, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு நவ., 19ல் நடந்தது. அதன் முடிவுகள், 2023 ஏப்ரல் மாதம் வெளியாகின.
முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தன; 1,333 ஆண்கள், 780 பெண்கள் பங்கேற்றனர்; 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்.
இம்முறை குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர், மிகவும் ஏழ்மையான நிலையில், தன் சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண் ஊழியர்கள், ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

