/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
/
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
UPDATED : டிச 15, 2024 03:37 PM
ADDED : டிச 14, 2024 11:17 PM

ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து சீதையை, ராமர் மீட்டு வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவர் ஆஞ்சநேயர். ராமர் கோவில் உள்ள இடங்களில் ஆஞ்சநேயருக்கு சிலையும் இருக்கும். பலத்தில் பொருந்தியவர் என்பதால், ஆஞ்சநேயரை போன்று பலசாலியாக இருக்க வேண்டும் என்று, பலரும் விரும்புவது உண்டு.
கர்நாடகாவின் கொப்பால் கங்காவதி அருகே அஞ்சனாத்ரி மலை, ஆஞ்சநேயர் பிறந்த இடமாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு அவருக்கு கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு 550 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். ஹனுமன் ஜெயந்தி அன்று இங்கு ஏராளமான பக்தர்கள் வருவர்.
கொப்பால் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆஞ்சநேயர் கோவில் தான். இங்கு ஒரு சிற்பி உள்ளார். அவரை பற்றி பார்க்கலாம்.கொப்பால் டவுனில் வசிப்பவர் பிரகாஷ். சிற்பியான இவர் கடந்த 18 ஆண்டுகளாக சிலைகளை வடிவமைத்து வருகிறார். அதுவும் ஆஞ்சநேயர் சிலை மட்டுமே. காரணம் பிரகாஷ் தீவிர ஆஞ்சநேயர் பக்தர் ஆவார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும், ஆஞ்சநேயர் பக்தர்கள். எனது வீட்டின் முன்பு அவருக்கு சிறிய கோவில் கட்டி, தினமும் வழிபடுகிறேன். கடந்த 18 ஆண்டுகளாக சிலை செய்யும் பணியில் ஈடுபடுகிறேன். நான் வடித்த அனைத்து சிலைகளையும் ஆஞ்சநேயர் தான். இதுவரை 6,454 சிலைகளை வடிவமைத்து உள்ளேன்.
'ஆஞ்சநேயா சிற்பகலை ஸ்டால்' என்ற பெயரில் கடை நடத்துகிறேன். சிலையை வடிவமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். வடிவமைத்த பின் சிலையை வழிபட்டு, தண்ணீர், உணவு சாப்பிடுவேன். சிலை வடிவில் ஆஞ்சநேயரை தினமும் பார்ப்பதன் மூலம், மனதிற்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -