இதயத்துடன் பறந்த 'வந்தே பாரத்': சாதித்து காட்டியது ரயில்வே
இதயத்துடன் பறந்த 'வந்தே பாரத்': சாதித்து காட்டியது ரயில்வே
ADDED : ஆக 02, 2026 01:59 AM

ஆமதாபாத்: குஜராத்தின் சூரத்தில் இருந்து, 250 கி.மீ., தொலைவில் உள்ள ஆமதாபாதிற்கு, 'வந்தே பாரத்' விரைவு ரயில் மூலம், மனித இதயம் முதன்முறையாக எடுத்துச் செல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
குஜராத்தில் சூரத் அரசு சிவில் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் இதயம் சமீபத்தில் தானமாக பெறப்பட்டது.
இதை, 250 கி.மீ., தொலைவில், ஆமதாபாதில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆராய்ச்சி மையத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
விமானம் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. குஜராத்தில் கனமழையால் மோசமான வானிலை நிலவியதால், விமான சேவை முடங்கியது. எனவே, சூரத்தில் இருந்து ஆமதாபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில், அந்த இதயத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சூரத் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாதிற்கு வண்டி எண்: 20901 என்ற வந்தே பாரத் ரயிலில், சிறப்பு மருத்துவக் குழுவினருடன், மனித இதயம் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை, 9:18 மணிக்கு புறப்பட்டது.
இரு நகரங்களுக்கும் இடையிலான, 250 கி.மீ., துாரத்தை எங்கும் நிற்காமல் கடந்து சென்ற ரயில், காலை 11:40 மணிக்கு ஆமதாபாத் வந்தடைந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட இதயம், அடுத்த, 15 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது.
தொடர்ந்து, நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து, அந்த இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த வரலாற்று சாதனையை மேற்கொள்ள உதவிய அனைத்து துறை அதிகாரிகளுக்கும், சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
