PUBLISHED ON : ஜூலை 25, 2011 12:00 AM

காந்தியின் திட்டங்கள் நிறைவேறுகின்றன! சு.நா.சரவணக்குமார், ராணுவம் (பணி ஓய்வு), நல்லகருப்பன்பட்டி, பெரிய குளத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதி திட்டம் செயல்பட்டால், ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.
இதன் மூலம் பால் உற்பத்தி மற்றும் இயற்கை உரம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும், பால் விலை குறையும்.இன்று நாம் விவசாயத்திற்கு பயன்படுத்துவது அனைத்தும், ரசாயன உரங்களே; இதன்மூலம், விவசாயிகள் வேண்டுமானால் மகசூலை அதிகரித்திருக்கலாம்... ஆனால், இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை, பல்வேறு வியாதிகளுக்கு உட்படுவது இந்த ரசாயன உரங்களின் பிரதிபலனே.இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், உற்பத்தியை பெருக்குவதற்காக, பசுமை தொ ழில், வென்மை புரட்சி ஏற்பட்டது. ஆனால், இது, இந்திய மனிதகுலத்தையே அழிவுப் பாதைக்கு எடுத்துச் சென்று கொண்டுள்ளது. இதன்மூலம் பயன்பெறுவது, மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தான்.தமிழக அரசின் புதிய திட்டம் முழுமையாக செயல்பட்டால், இயற்கை உரத்திற்கு தட்டுப்பாடு இருக்காது. ரசாயன உரங்களை மறந்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்புவர். இதன் மூலம் மக்கள் உடல் நலன், வளம்பெறும்.கால்நடை தீவன பயிர் பெருக்கத் திட்டத்தால் தரிசு நிலங்கள் மேம்படும். கிராமங்களில் தென் மாவட்டங்களிலிருந்து வேலைக்காக திருப்பூர், கோவை, சென்னை போவது குறையும். மேலும், அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் கிராமங்களுக்கு திரும்பும் வாய்ப்பும் அதிகரிக்கும்! சொட்டு நீர் பாசனத்திற்காக, 100 சதவீத மானியம் அளித்தால், விவசாய வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடமாக தமிழகம் மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சென்னை நகர மக்கள் வளர்ச்சியடைய தொழிற்சாலைகளை, அந்த நகரம் அருகிலேயே தொடங்கினார் முன்னாள் முதல்வர். ஆனால், இன்றைய முதல்வர், மகாத்மா காந்தியின் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முன்னிறுத்துகிறார். தற்போதைய அரசின் சில திட்டங்களில், மாற்றுக் கருத்து உடையவன் நான் என்ற போதிலும், முதல்வரின், இந்த இயற்கை சார்ந்த கிராம வளர்ச்சியை, வரப்போகும் சந்ததியினர் வெகுவாக மனதில் நிலை நிறுத்துவர் என நம்புகிறேன்.
அ.தி.மு.க.,வினர் எண்ணிப் பார்க்க வேண்டும்! சி.ஜெயக்குமார், சோம னூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: 'ஏன் தோற்றோம் என்று எங்களுக்கும் தெரியவில்லை; எப்படி ஜெயித்தோம் என்று அவர்களுக்கும் புரியவில்லை' என்று, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், கட்சி கூட்டம் ஒன்றில் அங்கலாய்த்திருக்கிறார்.இலவசங்களை அள்ளி வீசியதையும், ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டதையுமே சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி விடலாம் என்றிருந்த தி.மு.க.,வினருக்கு, மக்கள் விழிப்புணர்வு புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை.ஏற்கனவே, '2ஜி' விவகாரம், குடும்ப ஆதிக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவைதான், தி.மு.க.,வை படுகுழியில் தள்ளியது என்பது உலகறிந்த உண்மை. இப்பொழுது வெளியாகும், தி.மு.க., பிரமுகர்களின், நில அபகரிப்பு மோசடி செய்திகளும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்திருக்குமானால், சட்டசபையில் தி.மு.க., சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டு இருக்கும் என்பதே உண்மை.இப்படி, தி.மு.க.,வினர் தமக்குத் தாமே குழி வெட்டியதுடன், அ.தி.மு.க., வின் எழுச்சிக்கும், காரணகர்த்தாக்களாகி விட்டனர். இப்போதைய நிலையைப் பார்த்தால், தி.மு.க., எதிர்க்கட்சி குழுவின் ஒன்றாக மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், அப்பணியையாவது சரிவர செய்யுமா என்பதும் கேள்விக்குறிதான். வரும் காலங்களில் உட்கட்சி பூசலை சமாளிக்கவும், பாய்ந்து வரும் வழக்குகளை சந்திக்கவுமே தி.மு.க.,வினருக்கு நேரம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.தி.மு.க.,வின் இந்த அவல நிலையை, அ.தி. மு.க.,வினரும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
மத்திய அமைச்சர் என்ன செய்கிறார்?ஏ.ஆர்.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: இன்றல்ல, நேற்றல்ல... 1993 லிருந்தே, பயங்கரவாதிகள் மும்பையை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதனால், பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். உயிரிழந்தவர்களுக்கும், காயம் பெற்றவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை அறிவித்து விட்டு, பயங்கரவாதிகள் குறித்து, மெத்தனமாக இருந்து வருகிறது அரசு.கடந்த 2008, நவ., 26ல் நடந்த பயங்கர தாக்குதலில், வெளிநாட்டவரும் சேர்ந்து பலியாகினர். இதற்கு காரணமான, கசாப் என்ற பயங்கரவாதி பிடிபட்டும், அவன் மீதான நடவடிக்கையை, இன்னும் அரசு இழுத்தடிக்கிறது என்பது உலகறிந்த விஷயம். விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிப்பதற்கு, இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?பிடிபட்ட உடனேயே, விரைந்து நடவடிக்கை எடுத்து, தூக்குதண்டனை அளித்திருந்தால், பயங்கரவாதத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு, அச்சம் ஏற்பட்டிருக்கும். காந்திபிறந்த மண் என்பதால், வெறும் அகிம்சாவாதம் பேசிக் கொண்டிருந்தால், மேலும் பல உயிர்களை, நாம் பலி கொடுக்க வேண்டியிருக்கும். காயம்பட்டவர்களை, அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால் மட்டும், அவர்களுக்கு ஆறுதல் ஏற்படப்போவதில்லை. பயங்கரவாதிகளுக்கு, பிடிபட்ட உடனே தூக்கு என்ற சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இத்தனை கொடுமையிலும், சென்ற முறை குண்டு வெடிப்பில் தப்பியவர், இந்த முறையும் குண்டு வெடிப்பில் தப்பினார் என்ற செய்தி ஆறுதலாக இருக்கிறது.எது எப்படியிருப் பினும், அப்பாவி மக்கள், பயங்கரவாதத் தாக்தலுக்கு ஆளாகி, மருத்துவமனைப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை.மும்பை மக்கள் ஒன்றும், பலி ஆடுகள் அல்ல!
வேதனை தருகிறது!ஆர்.நாராயணசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: மொத்தம் 33 ஆண்டுகள் ஆசிரியராகவும், மூன்று பள்ளிகளுக்கு, 4 ஆண்டுகள் பள்ளியின் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளியில் படிப்போர் எல்லாரும், பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழகம் முழுவதும் ஏற்கனவே ஒரே பாடத் திட்டத்தில் படிக்கின்றனர்; அது சமச்சீர் கல்விதான்.இப்போது, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மட்டும் ஏன் சமச்சீர் கல்வித் திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கூறுகிறது? தரம் இல்லையெனில், பிளஸ் 1, பிளஸ் 2வில் தமிழக மாணவர்கள் ஒரே பாடத் திட்டத்தில் படித்துதான் பொறியியல், மெடிக்கல், அக்ரி இவற்றிற்கு செல்கின்றனர்.ஐகோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமை வேதனை அளிக்கிறது. இந்தியாவில், இரண்டு மாதங்களாக புத்தகம் இல்லாமல் பள்ளி சென்றவர்கள், தமிழக மாணவர்களாகதான் இருக்கும்.