sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : செப் 18, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 18, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவணன் பேசிய 'டயலாக்!' மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'தி.மு.க., எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து விட்டது.

இந்திராவால் கூட, தி.மு.க.,வை அழிக்க முடியவில்லை; இனியும் யாராலும் அழிக்க முடியாது' என, அக்கட்சி தலைவர் கருணாநிதி மார்தட்டுகிறார். பிரம்மாவிடம் பல வரங்கள் பெற்ற ராவணன், இரண்யகசிபு, சூரபத்மன் கூட, இதே, 'டயலாக்'கைத்தான் பேசினர். ஆணவத்தால், பல அட்டூழியங்கள் செய்து, தம் அழிவை, தாமே தேடிக் கொண்டனர். எத்தனையோ கட்சிகள், இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டன. சோவியத் யூனியன் சிதறுண்டு போனது நமக்குத் தெரியும். ஒரு காலத்தில், காங்கிரஸ் இந்தியாவையே ஆண்டது. இன்று, மாநிலக் கட்சிகளின் தயவில் வாழ வேண்டிய, பரிதாப நிலையில் இருக்கிறது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள் இருந்தவரை, தி.மு.க., புகழின் உச்சியில் இருந்தது. கருணாநிதி தலைவரான பின், அது கொஞ்சம் கொஞ்சமாக சரிவைத்தான் சந்தித்து வருகிறது. தி.மு.க.,வை அழிக்க ஸ்டாலினும், அழகிரியும் போதுமே!எழுந்து நடமாட முடியாத நிலைக்கு வந்திருக்கும் கருணாநிதி, தனக்கு இப்படியொரு நிலைமை வரும் என, நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அவருக்கே இந்த நிலை எனில், தி.மு.க.,வுக்கும் அந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்? யாரை, எங்கே, எப்படி வைக்க வேண்டும் என்பது, அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். அவனது திருவிளையாடலை, யாராலும் முன்கூட்டியே அறிய முடியாது. கோடி கோடியாய் சேர்த்திருக்கும் பணம், கடைசி வரை நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியுமா? தன் அருமை மகள் கனிமொழி, திகார் சிறையில் வாட நேரிடும் என, கருணாநிதி கனவிலும் நினைத்திருப்பாரா? எனவே, தி.மு.க.,வை யார் அழிப்பார் என்பது, அந்த ஆண்டவனுக்கு நிச்சயம் தெரியும்.



திருமழிசை வீடுகள்: மக்கள் எதிர்பார்ப்பு! வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'சென்னை அருகே திருமழிசையில், 2,160 கோடி ரூபாயில் துணை நகரம் அமைக்கப்படும்' என, தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள் ளார்; நல்ல அறிவிப்பு. சென்னையில் வீட்டுமனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளின் விலை எக்குத்தப்பாக ஏறியதால், மக்களின் வாங்கும் திறன் அபூர்வமாகி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இதைக்கருத்தில் கொண்டு தான், முதல்வர் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதனால், 12 ஆயிரம் பேருக்கு, வீடு அல்லது நிலம் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது, சந்தோஷமான விஷயம். வீட்டுவசதி வாரியம் தான், இந்த புதிய வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அரசுக்கான அனைத்து வீடுகளையும், இந்த வாரியம் தான் கட்டிக் கொடுத்து வருகிறது. இத்திட்டம் நல்லமுறையில் நிறைவேற வேண்டும் எனில், எவ்வித குறைபாடும் இல்லாத வீடுகள் உருவாக வேண்டும். ஏனெனில், சில ஊர்களில் வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள், விரைவில் சிதிலமடைந்து விடுகின்றன. அதனால், வீட்டு வசதி வாரியத்தின் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஏற்கனவே, மதுரையில் கட்டப்பட்ட வீடுகளில் விரிசல் விழுந்து, உபயோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக, செய்தி வெளிவந்ததை அனைவரும் அறிவர். இதைப் போலவே, சமீபத்தில், கோவையில் குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி கட்டடம், மண்ணில் புதைந்து வருகிறது. இப்படி, அரசால் கட்டப்படும் கட்டடங்கள் குறித்து தகவல்கள் வரும் போது, வீடோ அல்லது மனையோ, வாங்க மக்கள் தயக்கம் காட்டுவர் என்பது உண்மை. இம்மாதிரி நிலைமை, இப்போது உருவாகும் துணை நகரத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு வராமல் காத்து, அதை சர்வதேச தரத்திற்கு ஒப்பிடும் அளவுக்கு கட்டினால், அரசுக்கும் பெயர்; மக்களுக்கும் நிம்மதி!



ஆட்சி இழந்த பின் அக்கறை! வி.சந்தானம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் கட்சி வழக்கறிஞர்களிடையே பேசும் போது, வழக்குகளில் சிக்கித் தவித்து வரும் கட்சியினரைப் பாதுகாக்கவும், காவல்துறையினரை கேள்வி கேட்டு திணறடிக்கவும், பயமுறுத்தவும், தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த யோசனை கூறியுள்ளார். இச்செய்தியைப் பார்த்து, இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வரும் சமூக ஆர்வலர்கள் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் நிச்சயம் அடைவர். ஏனெனில், இந்த சட்டத்தை முதன் முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது கருணாநிதி தான். ஆனால், இந்த மகத்தான சட்டம் பெரும்பாலான மக்களைச் சென்றடையாமல் பார்த்துக் கொண்டார். அதாவது, பொதுமக்கள் விழிப்புணர்வு கொண்டு, தன் ஆட்சியின் ஊழல், அவலம் குறித்து கேள்விகளை எழுப்பிவிடக் கூடாது என்பதில், கவனமாய் இருந்தார். அதனால் தான், தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பிரசாரம் செய்யவில்லை. முரசொலியில் முழங்கவில்லை. தன் குடும்ப சேனல்களில், இது குறித்து ஒரு விழிப்புணர்வு விவாத நிகழ்ச்சி கூட நடத்த ஏற்பாடு செய்யவில்லை. தகவல் ஆணையத்தை, போதுமான உறுப்பினர்களை நியமிக்காமல் பலவீனப்படுத்தினார். இன்று, 'தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்து; காவல்துறையை கேள்விகளால் துளைத்து பயமுறுத்து' என, தன் உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரதான நோக்கம், மக்களுக்கான ஆட்சியில், அரசு நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான தன்மை வேண்டும், அரசு ஊழியர்களிடம் பொறுப்புணர்வு வேண்டும், லஞ்ச ஊழலற்ற செயல்பாடு வேண்டும் என்பது தான். ஆனால், கருணாநிதி கூறுவது போல், அரசுத் துறைகளை நிச்சயமாக பயமுறுத்த அல்ல! இருந்த போதிலும், தகவலறியும் உரிமைச் சட்டம் எவ்வளவு வலுவானது என கருணாநிதி கூறியிருப்பது, அதுவும் ஆட்சியை இழந்த பின் கூறியிருப்பது, வரவேற்கத்தக்கதே!



பஜனை எதிர்ப்பு எம்.பி.,க்களிடம் எடுபடுமா? திருமலைராஜன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஊழலை ஒழிப்பது, மிகவும் தீவிரமான ஒரு விஷயம். ஆனால், ஜன் லோக்பாலை எதிர்க்கும் எம்.பி.,க்கள் வீட்டு முன், பஜனைப் பாடல்கள் பாடி, கெரோ செய்வது என்ற அன்னா ஹசாரேயின் தீர்மானம், மேற்படி தீவிரமான விஷயத்தை நகைப்புக்கிடமாக்கி விடும். பெரும்பான்மையான மக்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்ததே, அவரது திடமான முடிவிற்குத்தான். ஆனால், விளம்பரத்திற்காக செய்வது போன்ற, 'கெரோ'க்கள், எடுத்துக் கொண்ட சவாலுக்கு வலுசேர்க்காது. எனவே, எதற்கும் அசராத எம்.பி.,க் களை, பஜனைப்பாடல்களால் அசைத்து விட முடியாது.



ரத யாத்திரை: ஒரு காமெடி! எஸ்.அனந்தராமன், புட்டப்பர்த்தி, ஆந்திராவிலிருந்து எழுதுகிறார்: 84 வயதான, பா.ஜ.,வின் மூத்த தலைவர் லால்கிருஷ்ண அத்வானி, லஞ்ச ஊழலுக்கு எதிராக, நாடு முழுவதும் ரதம் விடப் போகிறாராம். பகவான் கிருஷ்ணரின் நாமதேயம், அவரின் பெயரில் இருப்பதாலேயோ என்னவோ, ரதம் விடுவது போன்ற காமெடி எண்ணம் அவருக்குள் ஏற்பட்டிருக்கிறது. தேசிய நாளிதழ்கள் அனைத்திலும், கடந்த, 2011, செப்., 9ம் தேதி, ஜார்க்கண்ட் மாநில அரசின் ஓராண்டு நிறைவு சாதனையை தெரிவிக்கும் வகையில், ஒருபக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது, லஞ்ச ஊழலுக்கு எதிரான, பா.ஜ., தலைமையிலான, கொலை, லஞ்சம், ஊழல் நிறைந்த சிபுசோரனின் கட்சியுடன் சேர்ந்த கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு சாதனையே! லால் கிருஷ்ணர் இருக்கும் போது, அர்ச்சுனனும் இருக்க வேண்டும் அல்லவா? அவர் தான், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பா.ஜ., முதல்வரான அர்ஜுன் முண்டா. இவர் மீதும், நிறைய ஊழல் வழக்குகள் உண்டு. அதே போல, துணை முதல்வர் சுதேஷ் கிருஷ்ண மஹாதோ, இன்னொரு துணை முதல்வர் ஹேமந்த் சோரன். கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டும், சிறைக்கு அனுப்பப்படாமல், ஜாலியாக வெளியில் உலா வரும் சிபுசோரனின் மகன் தான், இந்த ஹேமந்த் சோரன்; இவரும், இதே பா.ஜ., கூட்டணி அரசில் தான் உள்ளார்! பா.ஜ., ஆட்சி புரியும் உத்தரகண்ட் மாநில முதல்வர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், பல ஊழல் புகார்கள் காரணமாக, பா.ஜ.,வின் தலைவர் நிதின் கட்காரியால், பதவி விலகச் செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைப் போலவே, பதவியிலிருந்து விலக முடியாது என, அழிச்சாட்டியம் செய்தவர் நிஷாங்க். ஆனால், இவரை நீக்கி விட்டு, அவசர அவசரமாக ஓட்டெடுப்பு நடத்தி, பி.சி.கந்தூரி என்பவரை முதல்வராக நியமித்துள்ளனர். 'ஊழல் போட்டி'யில் தங்க மெடல்களை அள்ளுபவர்கள், காங்கிரஸ்காரர்களும், தி.மு.க.,வினரும் என்றால், வெள்ளி, வெண்கல மெடல்களை அள்ளும் திறமை கொண்ட பா.ஜ.,வினர், ஹரியானாவிலும் ஒரு புதிய ஊழல் கூட்டணிக்குப் பரிசம் போட்டிருக்கின்றனர். 'ஆயாராம் கயாராம்' புகழ் பஜன்லால் காலமாகிவிட, அவர் மகன் குல்தீப் பிஷ்னோய் ஆரம்பித்துள்ள, 'ஜன்ஹிட் காங்கிரஸ்' என்ற புதிய ஊழல் கம்பெனியுடன் கூட்டு சேர, அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. இத்தகைய, 'பி' கிரேடு தேசிய ஊழல் கட்சியின் மூத்த தலைவர், ஊழலுக்கு எதிராக, 'ரத யாத்திரை' போகப் போகிறாராம்!



அவஸ்தைக்கு அளவே இல்லை! கி.சர்வோத்தமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கோவையிலிருந்து ராஜ்கோட் வரை செல்லும் விரைவு ரயில் வண்டியில், குளிர்சாதன வசதி உள்ள பெட்டியில் மூட்டைப்பூச்சி கடியிலிருந்து தப்பிக்க, அதில் பயணம் செய்த பயணிகளே, ரயிலை குண்டக்கல் ஜங்ஷனில் நிறுத்தி போராடியுள்ளனர். இச்செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது ஏதோ ஒரு நாள் சம்பவமல்ல; இது போன்று மூட்டைப்பூச்சி மற்றும் கொசுக்கடியால் பயணிகள் அல்லலுறுவது தொடர்கதை. இது பெரும்பாலும், 'ஏசி' வசதிகொண்ட பெட்டிகளில் சந்திக்கும் முக்கியமான பிரச்னை. இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிகளில், இந்த கொடுமை குறைவென்றே சொல்லலாம். ஜன்னல்களை திறந்து வைப்பதால், வெயில்பட்டு, பூச்சிகள் தொல்லை குறைகிறது. அதிகபணம் கொடுத்து, கூட்ட நெரிசல் இல்லாமல் செல்லலாம் என பயணம் செய்வோரை, இக்கொசுக்களும், மூட்டைப்பூச்சிகளும் படாதபாடு படுத்துவதற்கு, டெண்டர் கொடுத்து டென்ட் போட்டு, டேரா அடித்துள்ளன. ரயில்வே நிர்வாகம் இது பற்றி சிந்திப்பது இல்லை. மூட்டைப்பூச்சிகள், கொசுக்கள் மட்டுமல்ல, தற்போது எலிகளும், ரயில் பெட்டிகளில் குடியேறத் தொடங்கி விட்டன. சமீபத்தில், சென்னை எழும்பூரிலிருந்து கச்சிகுடா செல்லும் விரைவு வண்டியில், மெகபூட்நகரில் நடக்கும் திருமணத்திற்கு, குடும்பசகிதமாக செல்லும் போது, இரவு உணவுக்காக வைக்கப்பட்டிருந்த பைகளை, எலிகள் சுவைத்துக் கும்மாளமிட்டன. கால்களைக்கூட கீழே வைக்க முடியாத நிலை! அது மட்டுமல்ல... இரண்டு மாதங்களுக்கு முன்னர், காசி சென்று திரும்பும் போது, வாரணாசி ரயில் நிலையத்தில், 72 பர்த்துகளே உள்ள ரிசர்வ் கம்பார்ட்மென்ட் பெட்டியில், 200பேர் (ரிசர்வ் செய்யாத - விஜயவாடா வரை செல்லும் ஆந்திர பயணிகள் கும்பல்!) ஏறிவிட்டனர். ரிசர்வ் செய்த நாங்கள், வண்டியில் ஏறக்கூட மிகவும் சிரமப்பட்டு, பின் ஏறி, உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் இருக்கைகளில் உட்காரக்கூட முடியாமல் பெரும் அவதிக்குள்ளானோம். டிக்கெட் பரிசோதகர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அரசியல் லாபம் காரணமாக, நெடுநாட்களாக, ரயில்கட்டணம் உயர்த்தப்படாததால், பயணிகள் அனுபவிக்கட்டுமே என ரயில்வே நிர்வாகமும், அமைச்சகமும் விட்டு விட்டன போலும்! இந்த லட்சணத்தில், கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமென்று நிதிஅமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைந்துள்ளது! அன்னா ஹசாரேவின் கவனம், இந்தப் பக்கம் திரும்புமா; விடிவுகாலம் வருமா?



அப்பாவிகளே பலியாவர்; தலைவர்கள் அல்ல! வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: டில்லி ஐகோர்ட்டில் வெடிகுண்டு விபத்தில், இறந்தவர்களுக்கு பணமும், கருணையும் காட்டி, தன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படுமாம்! தங்களைக் காட்டிக் கொடுக்காமலிருக்க, ஐந்து கோடி தரத் தயாராக இருக்கின்றனர் பயங்கரவாதிகள். கூடிய விரைவிலேயே ஜனாதிபதி மாளிகையிலும், பார்லிமென்டிலும் குண்டு வெடித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், நம் காவல்துறையும், உளவுத் துறையும், அந்த அளவுக்கு மிகவும் உஷாராக இருக்கின்றன. இனிமேல், இந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும். ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் தீபாவளி, இனி, நித்திய தீபாவளியாகிவிடும். சிதம்பரத்திற்கு, வங்கிகளைத் திறக்கத் தான் நேரம் இருக்கிறது. சிவராஜ் பாட்டீல், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றவில்லை என காரணம் காட்டி, இவரை உள்துறை அமைச்சராக்கினர். பாவம், இவரது காலத்திலும், குண்டுகள் தாராளமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இனிமேல், தூக்குத்தண்டனையே வேண்டாம் என்ற முடிவுக்கு நம் அரசியல்வாதிகள் வந்துவிட்டதால், இனி கொலை, கொள்ளைகள் தாராளமாக நடக்கும். கோர்ட்டுகள் யாரையும் தண்டிக்கவே முடியாது. உலகத்திலிருக்கும் அத்தனை பயங்கரவாதிகளும் அடைக்கலம் தேடிவர, நம் இந்தியா வழிவகை செய்துவிட்டது. இனிமேல், குண்டு வெடிப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாம் அவரவர் தலையெழுத்து என்று சொல்லி, அமைதியாகிவிடுவர். எதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர்.








      Dinamalar
      Follow us