PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

தி.சு.பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி யிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தன் மகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுவதற்கு காரணம், மத்திய அரசின் கல்விக் கொள்கைதானே தவிர, திராவிட மாடல் அரசு காரணம் அல்ல' என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
சரி... சி.பி.எஸ்.இ., பள்ளிகளை விட்டு விடுவோம்...
கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி ஆகச் சிறந்தது எனப் பெருமை பேசும் முதல்வர், தங்கள் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை அடிப்படையாக வைத்து, மெட்ரிக் பள்ளிகளை நடத்துவதுதானே? எதற்காக ஹிந்தியைத் திணிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்த வேண்டும்?
ஊருக்கு ஒரு கொள்கை; பிழைப்புக்கு ஒரு கொள்கையா?
ஒருபுறம் ஹிந்தி எதிர்ப்பு என்று முழக்கம் இட்டபடி, மறுபுறம், தங்கள் பள்ளிகளில் ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்கின்றனரே கல்வித் தந்தைகளான உடன்பிறப்புகள்!
தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் இந்த கொள்கைப்பிடிப்பாளர்கள், ஏன் தாங்கள் நடத்தும் பள்ளிகளில், தமிழில் பேசும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்?
தாய் மொழியில் பேசினால், அபராதம் விதிக்க வேண்டும் என்று சொல்கிறதா தமிழக அரசின் கல்விக் கொள்கை?
'நம் கல்வித்திட்டம் மிகச்சிறந்தது' என மார்தட்டும் கல்வி அமைச்சர் மகேஷ், அவ்வளவு சிறப்பு வாய்ந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் மகனை படிக்க வைக்காமல், ஆழ்வார்பேட்டை இன்டர்நேஷனல் கரிக்குலம் பள்ளியில் படிக்க வைப்பது ஏன்?
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தின் கீழ் நாடு முழுதும், 14,500 பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வியும், வசதியும் வழங்கத் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது மத்தியஅரசு. இதில், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள் போக உத்தேசமாக, 12,500 மாநில அரசு பள்ளிகள் வரும்.
அதில், தமிழகத்துக்கு, 250 பள்ளிகள்ஒதுக்கப்படலாம். இப்பள்ளிகளில் மட்டும் தான் மூன்றாவதாக ஓர் இந்திய மொழி, அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான் கற்றுத் தரப்படும்.
ஆங்கில மொழி போல், மூன்றாவது மொழிப்பாடத்திற்கு கட்டாயத் தேர்ச்சியும் இல்லை. வெறுமனே ஒரு மொழியை எந்தவித அழுத்தமும் இல்லாமல் கற்றுக் கொள்வதற்கு எதற்கு இந்த எதிர்ப்பு?
உங்கள் பிள்ளைகள் மூன்று என்ன, பத்து மொழிகள் கூட படிக்கலாம்; எங்களைப் போன்ற ஏழைப் பெற்றோரின் குழந்தைகள், இலவசமாக ஒரு மொழியை படிக்க கிடைக்கும் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பீர்களா?
இதற்கு பெயர் சமூகநீதி அல்ல; சர்வாதிகார நீதி!
பெயிலான நீதிபதிகள்!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒடிசா மாநிலத்தில்,
கடந்த 2024ல் நடந்த, 45 மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வின் முடிவு
கடந்த மாதம் வெளியானது. 35 வயது முதல், 45 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்டு தொழில்
அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள், ஐந்து ஆண்டு அனுபவம் உள்ள சிவில் நீதிபதிகள்
இத்தேர்வில் பங்கேற்றனர்.
இதில், 31 நேரடி நீதிபதி நியமன
பதவிக்கு, 283 வழக்கறிஞர்களும், 14 நேரடி நீதிபதி பதவிக்கு, 83 சிவில்
நீதிபதிகளும் தேர்வு எழுதினார்.
ஆனால், ஒருவர் கூட இத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
வழக்கறிஞர்கள்
283 பேரில் முதற்கட்ட தேர்வில் 10 பேர், இரண்டாம் கட்ட தேர்வில் ஒன்பது
பேர், பொது ஆங்கிலம் தேர்வான ஒரியா - ஆங்கிலம்; ஆங்கிலம் - ஒடியா
மொழிபெயர்ப்பில், 48 பேர் மட்டுமே 30 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தாய்மொழி,
ஆங்கிலம் மற்றும் சட்ட அறிவில் போதிய திறமை இல்லாத இவர்கள், அரசியல்
செல்வாக்கினால் நீதிபதியானால், நீதித்துறையின் நம்பகத்தன்மை எந்த அளவிற்கு
இருக்கும்?
சமீபத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன்,
நீதித்துறையில் சமமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையுடன்
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில், 'இட ஒதுக்கீடு கேலிக்கூத்து
ஆகிவிட்டது; உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்
இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. மூன்று மற்றும் நான்காம் நிலை பணிகளுக்கு
மட்டுமே இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது' என்று அதிருப்தி
தெரிவித்திருந்தார்.
ஒடிசா மாநில நீதிபதிகள்தேர்வில் முற்பட்ட
ஜாதியினர் உட்பட ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. பொது ஆங்கிலத்திலும்
தேறவில்லை. ஒருவேளை, அத்தேர்வில் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் மட்டும்
தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள் அத்தனை பேரும் இடஒதுக்கீடு இன்றியே
நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பரே!
அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதை தவிர்க்கலாமே!
எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்?
ஜி.சூர்யநாரயணன்,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் தமிழக
முதல்வரின் அழைப்பின் பேரில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக் கட்சி
கூட்டத்தில், எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரோ அல்லது செய்தியாளரோ, 'தொகுதி
மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக ஏதேனும்
அறிக்கை வெளியிட்டுள்ளதா... இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தந்தது
யார்' என்ற கேள்விகளை கேட்டவில்லை.
மத்திய அரசு எந்தவிதஅறிக்கையும் வெளியிடாதநிலையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில், ஸ்டாலின் அரசு இப்படிஒரு வதந்தியை கிளப்புகிறது?
இப்படித்தான்,
'நீட் ரகசியம் தெரியும்' என்ற பொய்யைக் கூறினர். அதிகாரத்திற்கு வந்த
பின், 'நீட் விவகாரத்தில் எங்களால் ஒன்றும் செய்வதற்கில்லை; அது நீதிமன்றம்
சம்பந்தப்பட்டது' என்றனர். 'கடன் வாங்கி நிர்வாகம் செய்வது மானம் கெட்ட
வேலை' என்று முந்தைய அ.தி.மு.க., அரசை குறை கூறினர். தற்போது, அதே தவறை
செய்கின்றனர்.
இப்படி பொய்களையும், கற்பனை கதைகளையும் கூறியே
ஆட்சிக்கு வந்த தி.மு.க.,விற்கு, வரும் தேர்தலில் எதைச் சொல்லி ஓட்டு
சேகரிப்பது என்று தெரியவில்லை.
அத்துடன், மத்தியில் மட்டுமல்ல;
மாநிலத்திலும் தற்போது தங்களுக்கு எதிரி பா.ஜ., தான் என்பதை அறிந்து
கொண்டவர்கள், மத்திய அரசின் மீது வீண் பழிகளை சுமத்தி, அரசியல் செய்ய
ஆரம்பித்து விட்டனர்.
மும்மொழி கொள்கையிலேயே, தி.மு.க.,வின்
முகமூடி கிழிக்கப்பட்டு விட்டதை மறைக்க, தொகுதி மறுசீரைமைப்பு எனும் பொய்
தோரணத்தை துாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும்?