sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சிந்தித்தால் ஏமாற மாட்டீர்கள்!

/

சிந்தித்தால் ஏமாற மாட்டீர்கள்!

சிந்தித்தால் ஏமாற மாட்டீர்கள்!

சிந்தித்தால் ஏமாற மாட்டீர்கள்!

5


PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மு.முகமது இஸ்மாயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தினசரி நாளிதழ்களை புரட்டினால் மோசடி செய்திகள் தான் முன்வரிசையில் காணப்படுகின்றன. வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி, இரிடியம் தருவதாக, 20 லட்சம் ரூபாய் மோசடி. 'எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்; கவர்ச்சிகரமான வட்டி தருகிறோம். கடைசியில், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக தருகிறோம்' என்று ஆசை காட்டி மோசம் செய்யும் மோசடி.

தினமும் வேலைக்கு செல்லும் பெண்களிடம் அன்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்று, ஏலச்சீட்டு நடத்துவதாக சொல்லி, அவர்களிடம் பணத்தை வசூலித்து, ஒட்டுமொத்த பணத்துடன் ஊரை விட்டே சென்று விடும் நம்பிக்கை துரோக மோசடி.

இந்த மோசடிகாரர்களிடம் நீங்கள் ஏன் ஏமாற வேண்டும்? ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!

 அரசு வேலை என்பது, அங்காடிகளில் விற்கப்படும் கடைச்சரக்கல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால், நீங்கள் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதன் வாயிலாக, அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் வாயிலாக மட்டுமே, அரசு வேலைகளை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

 'பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள இரிடியத்தை நமக்கு ஏன் சில லட்ச ரூபாய்க்கு அவர் தர வேண்டும்... இரிடியத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று அவரே வைத்துக் கொள்ளலாமே?' என்று, சிந்தித்திருந்தால் நீங்கள் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை

 நிதி நிறுவனத்தார் உங்களின் முதலீட்டிற்கு வட்டி தருவதுடன், ஏன் இரட்டிப்பாக பணம் தர வேண்டும்? இது ஆசை காட்டி மோசம் செய்யும் வேலை என்று சிந்தித்திருந்தால், இதில் உங்களுக்கு ஏமாற்றம் வந்திருக்காது!

 ஏலச்சீட்டு நடத்துபவர் நீங்கள் கட்டும் பணத்திற்கு எந்த ஆதாரமும் தருவதில்லை. எனவே ஏலச்சீட்டு நடத்துபவர் யாராக இருந்தாலும் அவரிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.

பொதுமக்கள், அரசு அதிகாரிகளை அணுகி, அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிற போது, மக்களின் வரிப்பணம் தான் தங்களுக்கு சம்பளமாக கிடைக்கிறது என்பதை நினைக்காமல், அளவுக்கு அதிகமாக லஞ்சம் கேட்பதும், லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும் தினமும் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. லஞ்சம் வாங்குபவர்களை உடனடியாக வேலையிலிருந்து நீக்குங்கள். வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அந்த வேலையை கொடுங்கள்.

அப்போது தான் லஞ்சம் வாங்க நினைக்க மாட்டர். எதையும் சிந்தித்து செயல்படுங்கள் ஏமாற்றம் ஏற்படாது.

நம்பினோர் கெடுவதில்லை!


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு. மற்றவர்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிடுவது இல்லை' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஈ.வெ.ரா.,வின் பரம சீடரான அண்ணாதுரை கூட, 'கடவுள் இல்லை' என்று சொல்லவில்லையே? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதானே அவர் சொன்னார்!

தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் தந்தை முத்துவேலருக்கு கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஆலயத்தில் நாதஸ்வரம் வாசித்து இறைவனிடம் தனக்கு இருந்த பக்தியை வெளிப்படுத்தினார்.

கருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லை என்றாலும், தன் மனைவி கோவிலுக்குச் செல்வதை அவர் தடை செய்யவில்லை. ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை பழுதுபார்த்து தலைவர் கருணாநிதி ஓடச் செய்தார்.

தலைவர் ஸ்டாலினும் தன் மனைவி துர்கா கோவில்களுக்குச் செல்வதை தடை செய்யவில்லை. ஈ.வெ.ரா., குடும்பத்திலும் அவரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் கடவுளிடம் நம்பிக்கை உள்ளவர்களாகத்தானே இருந்தனர்!

இங்கே தான் பாயின்ட்... ஈ.வெ.ரா., செய்த பகுத்தறிவு பிரசாரத்திற்குக் கிடைத்த மகத்தான தோல்வி இது தான்.

வெறும் 5 சதவீதம் இருக்கும் நாத்திகர்களால், 95 சதவீதம் இருக்கும் ஆத்திகர்களை எப்படி மனமாற்றம் செய்ய முடியும்? கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆர்., தன் கடைசிக் காலத்தில் கொல்லுார் மூகாம்பிகையிடம் சென்று சரணடையவில்லையா?

இந்த மாநாட்டை, வேறு கட்சியினர் யாராவது ஏற்பாடு செய்திருந்தால், ஒரு கூட்டம், கறுப்புச்சட்டை அணிந்து, விஷத்தைக் கக்கி இருக்கும்; ஆனால் இப்போது அதைச் செய்ய முடியாது. வாய் மூடி மவுனம் காக்க வேண்டியது தான்!

எனவே, ஆத்திகத்தை நாத்திகம் வென்றதாக வரலாறு இல்லை; நம்பினோர் கெடுவதும் இல்லை.

பிரபலங்களுக்கு தண்டனையே கிடையாது!




அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது வரை சிறையில் உள்ளார்.

அவரை பிணையில் விடச் சொல்லி, கீழமை நீதிமன்றம் முதல் உயர், உச்ச நீதிமன்றம் வரை பல முறை ஜாமின் மனு போட்டு, கடைசியில் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜாமீன் மனு மீது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகள் மீது எளிதாக வழக்குகள் நடத்தி, அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாது. தமிழக அமைச்சரவையில் தற்போது வழக்குகளை எதிர் கொண்டு நடத்தி வரும் சில அமைச்சர்கள், தங்களின் பதவியை பயன்படுத்தி, தங்கள் மீது தொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளில் இருந்து வழக்கை முழுமையாக நடத்தாமல் தப்பியதை நாம் அறிவோம்.

இது போன்று, நாடு முழுதும் உள்ள பல ஆயிரம் குற்றவாளிகள், செந்தில் பாலாஜி போன்று பிரபல வழக்குரைஞர்களை அமர்த்தி, அடுத்தடுத்து ஜாமின் மனுக்களை உயர், உச்ச நீதிமன்றம் வரை சென்று போட்டு வாதிட முடியாது.

செந்தில் பாலாஜி வழக்கில் இதுவரை மற்றொரு முக்கிய குற்றவாளியாக உள்ள அவரது சகோதரர், தற்போது வரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளார் என்றால், எந்தளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர்களாக இவர்கள் உள்ளனர் என்பதை, நாம் அறிய முடிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, உண்மையான நிரபராதி என்று கூறி விட முடியாது.

சி.பி.ஐ., அவர்களுக்கு எதிராக, சரியான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் அவர்கள் தப்பித்து விட்டனர் என்று சொல்லலாம்.

அதே சமயம், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மீது, ஒரு வழக்கில் குண்டாஸ் போட்டு, அதில் ஜாமின் கிடைத்ததால், மீண்டும் ஒரு வழக்கில் குண்டாஸ் போடப்பட்டு, தொடர்ந்து சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.

ஆளும் கட்சி என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றிக் கொள்வது சாத்தியமே என்பது, எந்த அரசு அமைந்தாலும் விதி என்பது போல் ஆகி விட்டது.






      Dinamalar
      Follow us