sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

முட்டாளா, முழு ஆளா?

/

முட்டாளா, முழு ஆளா?

முட்டாளா, முழு ஆளா?

முட்டாளா, முழு ஆளா?


PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடலின், 'கடவுள்' ஆன, ஈ.வெ.ரா., தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம், 10 ரூபாய் வாங்கி கொண்டு தான், படம் பிடிக்க அனுமதிப்பார்.

சென்னையில், அண்ணாசாலை, அண்ணாசிலைக்கு அருகில், பிளாட்பார ஜோதிடர்கள், பிரபலமானவர்களுக்கு கை ரேகை பார்த்து சொன்னது போல புகைப்படம் எடுத்து, வரிசையாக அடுக்கி வைத்திருப்பர்.

நிற்க...

'பா.ஜ.,வுடனும், பிரதமரோடும் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான். பதவி வெறி பிடித்த கட்சி அல்ல அ.தி.மு.க., நாங்கள் யாருக்கு மறைமுக ஆதரவு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமி பரப்புரை நிகழ்த்தி இருக்கிறார்.

அன்னாரது அந்த பரப்புரையை படித்தபோது, 'இவரெல்லாம் எப்படி முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து நிர்வாகம் நடத்தினார்... இவர் முட்டாளா, முழு ஆளா?' என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

ஏனெனில், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் இருப்பது போன்றதொரு புகைப்படத்தை காட்டி இருக்கிறார்.

இப்போது இக்கடிதத்தின் முதலில் குறிப்பிட்டுள்ளவற்றை சற்று வாசித்து பாருங்கள்.

பிரபலமானவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்வது, சாதாரணமான விஷயம் தான்.

அதிலும் பிரதமரும், முதல்வரும் அருகருகே இருந்தபடி புகைப்படம் எடுப்பதும், சர்வ சாதாரணமான விஷயம் தான்.

இதே பழனிச்சாமி முதல்வராக கோலோச்சியபோது, இதே பிரதமருடன் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம்.

நாளை அல்லது அதற்கு மறுநாள், தி.மு.க., பிரசார மேடைகளில், பிரதமரும், பழனிச்சாமியும் இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, வழக்கமாக வழங்கும், 'அர்ச்சனை' சொற்களை, ஸ்டாலின் பொழிந்தாரானால், பழனிச்சாமியால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

மீண்டும் அதே கேள்வி... மூவன்னாவா, மு.ஆவன்னாவா?



இப்படி தான் ஊழலை ஒழிக்க முடியும்!

சுப்ர அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் செலவு, 1.20 லட்சம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நம் தேர்தல் செலவும், அமெரிக்க தேர்தல் செலவும் சரிசமம்.

இங்கே வாக்காளர்களுக்குப் பணமாகவும் பொருளாகவும் கொடுக்கும் லஞ்சம், இந்தக் கணக்கில் வராது.

சோஷியலிஸ்ட் ஜெயபிரகாஷ் நாராயணன் அறிவுறுத்தியது போல், கட்சிகளே இல்லாத மக்களாட்சி தேர்தலை அறிமுகப்படுத்தினால் இவ்வளவு லஞ்சமும், அடாவடிகளும் நீங்க விடும்.

மக்கள் நேரடியாக செலுத்தும் ஓட்டுகள் மூலம், 51சதவீதம் வாக்குகள் பெறும் வேட்பாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டால் இந்த அளவு மக்கள் பணம் வீணாகாதல்லவா?

தேசத்தின் தலைவர் ஜனாதிபதி என்றும், மாநிலங்களுக்கு கவர்னர்கள் என்றும் நடைமுறைப்படுத்தி விடலாம்.

வாரிசு கட்சி, சுய நல கட்சி, அராஜக கட்சி, மோசடி கட்சி என, அனைத்தும் காணாமல் போய்விடும்.

பா.ஜ., அமித் ஷாவின் சீமந்த புத்திரன், பி.சி.சி.ஐ., எனப்படும் கிரிக்கெட் வாரியத்தைக் கட்டுப்படுத்தி, செம கல்லா கட்டுவது ஊரறிந்த ரகசியமாகிப் போனது.

இப்படிப்பட்ட நடவடிக்கை உள்ளவர்கள், அரசியலிலிருந்து விலகி நிற்கும் வகையில், வாரிசே அற்ற பிரதமர் மோடி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மோடிக்குதுணை நிற்போம்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமலாக்கத் துறை சம்மன்களுக்கு அடிபணியாத டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இது குறித்து முதலில் ஜெர்மனியும், பின் அமெரிக்காவும், சமீபத்தில் ஐ.நா.,வும் விமர்சனம் செய்துள்ளது, விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது.

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த இந்நாடுகளின் பிரதிநிதிகளை, நம் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூப்பிட்டு மூக்கறுத்து அனுப்பி இருக்கிறார்.

கனடாவிலிருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், கெஜ்ரி கட்சிக்கு நிதி உதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரிவினைவாதிகள், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், நம் நாட்டுக் கொடியை அவமதிப்பது, ஹிந்துக்களின் மீதுதாக்குதல் நடத்துவது, ஹிந்துக்கள் கோவில்களை சேதப்படுத்துவது போன்ற அராஜக நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

கருத்து சுதந்திரம், தனிநபர் உரிமைகள் என்ற பெயரில், அந்த அரசுகளும், இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

காங்., ராகுல், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பேசும்போது, 'இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, உலக நாடுகள் காப்பாற்ற முன்வர வேண்டும்' என, இந்திய விரோத கருத்துகளை பதிவு செய்தார். இவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு பின்னால், இந்திய விரோத சக்திகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

கூடங்குளம் துவங்கி, தற்போதைய சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டம் வரை அனைத்திலும், இந்திய விரோத சக்திகளின் ஆதிக்கமே தலைதுாக்கி நிற்கிறது.

இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி, நாட்டைக் காப்பாற்றும் மோடிக்கு, மக்களாகிய நாம் தான் தோள் கொடுத்து துணை நிற்க வேண்டும்!



'மெசஞ்சர் வித்ட்ராவல்' முறை மீண்டும் வருமா?

பி.முனுசாமி, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: பொது மக்களுக்கான சேமிப்பு வங்கிகள், எத்தனையோ உள்ளன. அவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது, தபால் துறை சேமிப்பு கணக்கு.

அந்தக் கணக்கில், லட்சக்கணக்கான நபர்கள் வரவு - செலவு செய்து கொண்டிருக்கின்றனர். தன் சொந்த வீட்டில் பணப் பரிமாற்றம் செய்வது போல், சுலபமாகச் செய்கின்றனர்.

மற்ற வங்கிகளை விட, தபால் துறையில் குறைந்தது, 500 ரூபாய் இருந்தாலே, கணக்கு துவக்கி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பணம் எடுப்பதற்கு, பாஸ் புத்தகத்தில் பெயர் உள்ளவர் தான் வர வேண்டும். ஆனால், டிபாசிட்டர் உடல் நலமில்லாமலோ, வெளியூர் சென்றிருந்தாலோ, 'மெசஞ்சர் வித்ட்ராவல்' என்ற நடைமுறை இருந்தது. சமீபத்தில் இந்த நடைமுறையை நீக்கி விட்டது, அஞ்சல் துறை.

இது, பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நடக்க முடியாதவர்கள், ஒவ்வொரு முறையும் அஞ்சலகத்திற்கு வந்து பணம் எடுப்பது, முடியாத காரியம்.

எனவே, மீண்டும், மெசஞ்சர் வித்ட்ராவல் நடைமுறையை அமல்படுத்த, மத்திய அரசு ஆணையிட வேண்டும்.








      Dinamalar
      Follow us