PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இண்டியா' கூட்டணி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்ய, இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சித் தலைவர்கள் ஜூன் 1ம் தேதி டில்லியில் கூடும் கூட்டத்தில் முடிவு செய்யப் போகின்றனராம்.
இண்டியா கூட்டணி, இந்த தேர்தலில் 100 தொகுதிகளிலாவது வெற்றி பெறுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தப்பி தவறி, இண்டியா கூட்டணி, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவிக்கு யார் வருவர் என்பது நிச்சயமில்லை.
'அய்யா சாமி... எனக்கு பிரதமர் பதவியே வேண்டாம்... ஆளை விடுங்கள்' என்று ஜகா வாங்கி விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் பதவியில் ஆசை இல்லாமல் போய்விட்டது. ராகுலும் பிரதமர் பதவியை ஏற்பாரா என்பது டவுட் தான். அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியே வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் அவர்.
ஏகமனதாக பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாமல், இண்டியா கூட்டணி தலைவர்கள் நிச்சயம் தடுமாற்றம் அடைவர் என்பதில் சந்தேகமில்லை. அப்படியே, பிரதமரை இவர்கள் தேர்ந்தெடுத்தாலும் ஐந்து ஆண்டுகள் பிரச்னைகள் ஏதும் வராமல் ஆட்சி செய்வரா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
இந்திராவுக்கு எதிராக ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, 1977ல் மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், மூன்றே ஆண்டுகளில் அந்த ஆட்சி கவிழ்ந்த கதை நமக்கு தெரியும். 'மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என்று திராவிடச் செம்மல்கள் சொல்வதும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
அதுவும் இல்லாமல், இண்டியா கூட்டணியில் ஊழல்வாதிகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ததால், ஹிந்துக்களின் ஓட்டுகள் அந்த கூட்டணிக்கு விழுந்திருக்கவும் வாய்ப்பில்லை.
எனவே, ஆண்டிகள் ஒன்று கூடி மடம் கட்டிய கதையாக முடியப் போகிறது இண்டியா கூட்டணி தலைவர்கள் டில்லியில் கூடும் கூட்டம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடுத்த பிரதமர் மோடி தான் என்பது முடிவாகி விட்டது. அந்த கூட்டணி வெற்றி பெற்றால் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் ஆட்சி நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெ., இடத்தில் அண்ணாமலையா?
என்.ஏ.நாக
சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'தமிழக அரசியலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற இடம் காலியாகவே
உள்ளது. அதை யார் வந்தாலும் நிரப்ப முடியாது' என, அ.தி.மு.க.,வினர்
பெருமையாக பேசி வந்தாலும், அந்த இடத்தை பா.ஜ., அண்ணாமலை நிரப்பி விட்டார்
என, அக்கட்சியினர் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர்.
திராவிட கொள்கை
கொண்ட எம்.ஜி.ஆர்., அவருடைய இளமைக் காலத்தில் தி.மு.க.,விலிருந்து
வெளியேற்றப்பட்டதால், அ.தி.மு.க.,வைத் துவங்கி, கருணாநிதியை எதிர்த்து
அரசியல் செய்து, ஆட்சியைப் பிடித்தார்.
தமிழ் திரையுலக நடிகையாக
மக்களுக்கு அறிமுகமாகி இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்;
கொள்கை பரப்பு செயலராக பதவி பெற்றார். எம்.ஜி.ஆர்., காலமான பின்,
அ.தி.மு.க., பிளவுபட்டு, உடைந்து சிதைந்த வேளையிலும், தனக்காக ஒரு
கூட்டத்தை வைத்து போராடினார்; கட்சி தன் வசமானது.
முதல் முறை,
ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சிலரின் தவறான வழிகாட்டுதல்களால், அவப் பெயர்
பெற்றார். பின் வந்த காலங்களில், அரசியல் நுட்பத்தை கற்று, தி.மு.க.,வை
எதிர்த்து, சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நின்றார்.
தேசிய அரசியலையே
திரும்பிப் பார்க்கும் வகையில், 'மோடியா, லேடியா?' என சவால் விட்டார்.
தி.மு.க.,வையும்,அதன் தலைவர் குடும்பத்தையும், தமிழகத்தை விட்டே, வேரும்
வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும் என, கோஷமிட்டு அரசியல் செய்தார்.
ஆனால்,
காலம் செய்த சதி அவரை பலி வாங்கிவிட்டது. அதன் பின், அ.தி.மு.க.,வில்
யாரும், ஜெயலலிதா உயரத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட திராணி இல்லாதவர்களாக
இருக்கின்றனர்.
அதற்காக, பா.ஜ.,வின் அண்ணாமலை, ஜெயலலிதா இடத்தை
நிரப்புகிறார் எனச் சொல்லி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உசுப்பேற்றினால்,
உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதையாகி விடும்.
அண்ணாமலைக்கு கூஜா துாக்கி கூவுவோர், சில காலம் வாய் பொத்தி மவுனம் காப்பது நல்லது.
மேடையில் பேசுபவர்களுக்கு கவனம் தேவை!
எஸ்.
உதயம் ராம், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருவள்ளுவர் அவதரித்தத் திருநாள், வைகாசி அனுஷம் என்பது அனைவருக்கும்
தெரியும்.
திருக்குறளின் மீதும், திருவள்ளுவரின் மீதும் உண்மையான
பக்தியும், காதலும், ஆர்வமும் கொண்டவர்கள் அவருடைய அவதார தினத்தைத்
திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர்.
குறிப்பாக திருவள்ளுவர் திருநாள்
கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம், மயிலை திருவள்ளுவர் சங்கம் போன்ற
அமைப்புகள், இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
அந்த
வகையில், திருவள்ளுவர் அவதரித்த வைகாசி அனுஷத்தன்று, தமிழக கவர்னர் ரவி,
சிறப்பான நிகழ்ச்சியை, கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய அமைப்பைச் சார்ந்தவர்கள் என, 250 பேர் வந்திருந்தனர்.
மிகச்
சிறப்பான வரவேற்பு. கவர்னர் அவர்கள் ஒவ்வொரு வரிசையாக வந்து, சிரித்த
முகத்துடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பண்பு ஆச்சரியப்படுத்தியது.
குத்து
விளக்கேற்றுதல், தெய்வப் புலவரின் படத்துக்கு மலர் துாவி மரியாதை
செலுத்துதல், இறை வணக்கமாக திருக்குறளைப் பாடுதல் என, விழா களை கட்டியது.
திருவள்ளுவரின்
பிறப்பையும், வைகாசி அனுஷ நட்சத்திரத்தின் பெருமையையும், மகா பெரியவர்,
ராமானுஜர் உட்பட பல ஞானிகள் அன்றைய தினத்தில் அவதரித்ததன் பெருமையையும்
அறிவியல் பூர்வமாக திரையில் விளக்கிக்காட்டியது, புதிய செய்தி யாய்
இருந்தது.
திருக்குறளுக்குத் தன்னலமற்ற வகையில் தொண்டாற்றி வரும் பலரையும் வரவழைத்து, கவுரவப்படுத்தினார் கவர்னர்.
அதுவரை
சிறப்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி, திடீரென தடம் புரண்டது.
பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்த அன்பர்கள், இது கவர்னர் விழா என்பதையும்,
குறித்த நேரத்துக்குள் விழா முடிக்கப்பட வேண்டும் என்பதையும் மறந்து,
முடிக்கச் சொல்லி துண்டு சீட்டு கொடுத்தும் கூட புரிந்து கொள்ளாமல் மனம்
போன போக்கில் பேசி, தங்கள் பெருமையை பறைசாற்றி, மேடையில் இருந்தவர்களையும்,
பார்வையாளர்களையும் நெளிய வைத்து விட்டனர்.
பேசுவதற்கு மேடை கிடைப்பவர்கள், இவ்விஷயத்தில் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.