/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பாராட்டலாம் தான்... ஆனால் குறுக்கீடு இருக்கக் கூடாதே!
/
பாராட்டலாம் தான்... ஆனால் குறுக்கீடு இருக்கக் கூடாதே!
பாராட்டலாம் தான்... ஆனால் குறுக்கீடு இருக்கக் கூடாதே!
பாராட்டலாம் தான்... ஆனால் குறுக்கீடு இருக்கக் கூடாதே!
PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

ந.தேவதாஸ்,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுதும் ரவுடிகளை முழுமையாக
ஒழித்து, சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்த, முதல்வர் ஸ்டாலின்
திட்டமிட்டுள்ளார். இதற்காக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம்
கொடுத்திருப்பதாகவும், காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக
சட்டம் - ஒழுங்கு குறித்து தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும்
நெருக்கடி தொடர்வதால், சரிந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யும்படி,
தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.
அன்று நிர்வாகத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பதற்கு, காமராஜர் ஒரு முன்னுதாரனமாக விளங்கினார்.
அவரது ஆட்சி காலத்தில் தமிழகத்தை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.
அதாவது,
கள்ள நுாறு ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்தில் பெரும் அளவில் புழக்கத்தில்
விடப்பட்டு, பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்து விடுமோ என்ற நிலை
தோன்றியது. அதை விசாரித்து கண்டுபிடிக்க, தன்னுடைய நேரடி மேற்பார்வையில்,
தலைமை போலீஸ் அதிகாரி ஒருவரை நியமித்தார் காமராஜர்.
அந்த
அதிகாரியிடம், 'இதோ பாருங்கள்,விசாரணையின் போது தயவு தாட்சண்யமேகாட்ட
வேண்டாம். கதர் சட்டை போட்டிருந்தால் அதற்காக யோசிக்காதீர்கள்;
சந்தேகப்பட்டால் கைது செய்து விசாரியுங்கள். எனக்கு சொந்தக்காரன் என்று
சொல்வான்; அதை லட்சியம் பண்ணாதீர்கள்.
'இதுபோன்ற கேஸ்களில் பெரிய
புள்ளிகள் தான் சம்பந்தப்பட முடியும். அதற்காக யோசிக்காதீர்கள். உங்கள்
கடமையை செய்வதில், எந்த அரசியல் குறுக்கீடும் இருக்காது. அப்படி தலையீடு
இருந்தாலும்,அதை பொருட்படுத்தாமல் உங்கள் கடமையை செய்யுங்கள். என் முழு
ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு' என்று உற்சாகப்படுத்தி, அந்தப் பணியை போலீஸ்
அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
அவரும் நேர்மையாக உழைத்து, கள்ள
நோட்டு தயாரித்த மில் உரிமையாளர் ஒருவரை கைது செய்து, தண்டனை வாங்கி
கொடுத்தார். காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்று அழைக்கப்படுவதற்கு, மக்கள்
நலனில் அவர் காட்டிய அக்கறையும், நிர்வாக நேர்மையுமே காரணம்.
இதே
வழியை பின்பற்றி, தமிழகத்தில் தற்போது ரவுடியிசத்தை முழுமையாக ஒழிக்க,
முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் திட்டமும் பாராட்டுக்குரியது.
காமராஜரைப்
போன்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, யாருடைய குறுக்கீடும் இல்லாமல்,
முழுமையான சுதந்திரத்தை அளித்து, இரும்புக்கரம் கொண்டு இப்பிரச்னைக்கு
தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
'நீ இல்லையேல் நான் இல்லையே!'
ஆர்.ரபீந்த், பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: தேர்தல்நேரங்களில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைத்துக் கொள்வதில் போட்டி போடும். அப்படிஅமைத்து வெற்றி பெற்றதும், 'என்னால தான் உனக்கு வாழ்வு' என்ற இறுமாப்பையும் பார்த்து வருகிறோம்.
திருச்சி கூட்டம் ஒன்றில், 'நாம் ஒன்றாக செயல்பட்டால், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மலைக்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டைக்கு தனியாக சென்று விடலாம்' எனக் கூறியுள்ளார், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை.
நினைத்தாலே சிரிப்பாக இருக்கிறது!
மேலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதும்,அக்கட்சிக்கு தலைகால் புரியவில்லை; தனித்து நின்றிருந்தால், நாற்பதும் கிடைத்திருக்கும் என நினைத்து குதிக்கிறது.
என்ன தான் கூட்டணிஅமைத்திருந்தாலும், தி.மு.க., தொண்டர்களும், பணபலமும் தான் முக்கியகாரணம் என்பதை, செல்வப் பெருந்தகையால்மறுக்க முடியாது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பது தான் உண்மை.
அதேசமயம், தி.மு.க., கட்சியும் தனித்து நின்றிருந்தால், இந்த அளவு வெற்றி கிடைத்து இருக்காது என்பதையும் மறுக்க முடியாது.
முன்பு, சட்டசபை தேர்தலில், வெறும் 95 இடங்களில் வெற்றி பெற்று, உடனே முதல்வராக பதவியேற்று, 'மைனாரிட்டி அரசு' என பெயரெடுத்த கருணாநிதி காலத்து தி.மு.க., இப்போது இல்லை.
இரு கட்சிகளுமே, 'நீ இல்லையேல், நான் இல்லையே...' பாட்டு தான் பாட வேண்டும் என்பது தான் உண்மை.
தேசி யகட்சித் தலைவரின் பொறுப் பற்ற பேச்சு!
எஸ்.அன்பர்பாஷா,கீழக்கரையிலிருந்து அனுப்பிய'இ-மெயில்' கடிதம்: காங்., தலைவர் கார்கே, 'பா.ஜ.,வின் ஜம்மு - கஷ்மீர் கொள்கையில்,'கஷ்மீரியத்' இல்லை' என்று பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
உண்மையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்தது, காங்கிரசின் முக்கிய, முதல் தவறு; காஷ்மீரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, அடுத்த தவறு.
இதனால் அம்மாநிலத்தவர்கள், தங்களை ஏதோ தனி நாட்டில் வசிப்பவர்கள் போல எண்ணத் தொடங்கி விட்டனர்.
காங்., ஆட்சியில் தான், கஷ்மீரில் தீவிரவாதம் தலை விரித்தாடியது. தாங்கள் பெரும்பாலானவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஹிந்துக்கள், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டு, மிரட்டப்பட்டு, கஷ்மீரை விட்டே விரட்டப்பட்டனர்.
அனைத்தையும்,'எந்தக் காட்டிலோமழை பெய்கிறது'என்பதைப் போல, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது காங்கிரஸ்.
பா.ஜ., தான் துணிந்து, தேச ஒற்றுமையை, நலனை மனதில்கொண்டு, ஓட்டு வங்கிக்கணக்கு பார்க்காமல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, நாம் அனைவரும் ஒன்றே என்பதை பறைசாற்றியது.அம்மாநிலத்தில் தீவிரவாதத்தை, வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
இப்பொழுதும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு சம்பவங்கள் நடைபெற்று வருவதை மறுப்பதற்கில்லை; ஆனால் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
காஷ்மீருக்கு நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசத்தை உணர முடியும். எம்.ஜி.ஆர்., படத்தில் மட்டுமே, நாமெல்லாம் காஷ்மீரைப் பார்த்திருப்போம்; இப்போது நாம் நேரிலே சென்று பார்க்கலாம்!
பிராந்திய உணர்வுகளை, மறைமுகபிரிவினைவாத சிந்தனைகளை தூண்டிவிடும் வகையில், சுதந்திரம் வாங்கித் தந்த தேசிய கட்சியின் தலைவர் கார்கே பேசுவது, துரதிருஷ்ட வசமானது.
மாறாக அவர் தேசம், தேசியம், இந்தியா, இந்தியன்என்கிற உணர்வுகளை வளர்க்கும் வகையில் பேசியிருக்க வேண்டும். இனியாவது அவர் தன் பொறுப்பை, தான் தலைமை வகிக்கும் கட்சியின் வரலாற்றை உணர்ந்து பேசுவார், செயல்படுவார் என்று நம்புவோம்.