sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பாராட்டுகிறோம் சர்ச் உறுப்பினர்களை!

/

பாராட்டுகிறோம் சர்ச் உறுப்பினர்களை!

பாராட்டுகிறோம் சர்ச் உறுப்பினர்களை!

பாராட்டுகிறோம் சர்ச் உறுப்பினர்களை!

4


PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீதேவி சிவகுமார், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுபடுத்தும் விதமாக, மத போதகர் பிரின்ஸ் கால்வின் பேசியிருந்தார்.

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பேசிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஹிந்து அமைப்புகள் புகார் கொடுத்தன. நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

ஹிந்துக்கள் யாராவது இது போல மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பேசியிருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பர்; அதில், சந்தேகமே இல்லை.

அப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதில் தவறேதும் இல்லை.

ஆனால், பிற மதத்தினர் அதே தவறை செய்தால், அவர்கள் மீதும் அது போன்ற நடவடிக்கையை துணிந்து எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் ஓட்டுகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில், நடவடிக்கை எடுக்க அரசு தயங்கி நிற்பது மிகவும் ஆபத்தானது; வெட்கக்கேடானது.

பிற மதத்தினருக்கு ஏதாவது பிரச்னை என்றால், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் கோஷம் போடுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் அந்த மதபோதகரை கண்டிக்க, எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை. ஓட்டு வங்கி தான் பேசுகிறது இங்கே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத நல்லிணக்கத்தை காப்பதற்காகவும், பிரச்னையை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, 'ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது; இந்திய இறையாண்மையைசீர்குலைக்கும் வகையிலும், இரு மதத்தினரின் நல்லுறவை கெடுக்கும் வகையிலும் உள்ளது.

'எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, போலீசாரிடமும், பேராயரிடமும் புகார் கொடுத்துள்ளனர். அவர்களின் செயல் மிகவும் வரவேற்கத் தக்கது; பாராட்டத்தக்கது!



சட்டத்தில் சிறு பூச்சிகள் மட்டுமே சிக்கும்!


எஸ்.முத்துகுமார், சிவகங்கையில் இருந்து எழுதுகிறார்: நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதி இருந்தார்.

நடந்திருப்பது மிகப் பெரிய குற்றம் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய சாட்சிகள் இல்லாத ஒரு காரணத்திற்காக குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் ஏராளம்.

இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் ஆசியோடு செயல்படும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம். இதனால் விரயமான அரசு நிதி, கணக்கில் சொல்லி மாளாது.

ஒருபுறம் கனிமவளக் கொள்ளை; மறுபுறம் அரசு நிதி விரயம்.

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் கருவூலத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கையாடல், அதிகாரிகளின் மெத்தனத்தால் எந்த நடவடிக்கையும் இன்றி நீர்த்துப் போய் விட்டது.

நாட்டில் குற்றங்கள் மட்டுமல்லாது அரைகுறையான அரசு திட்டங்கள் வாயிலாகவும், அரசு நிதி வீணாவது தடுக்கப்பட வேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது. அரபு நாடுகளைப் போல் கடுமையான சட்டங்கள் வந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சட்டம் ஒரு சிலந்தி வலை. அதில் சிறு புழு பூச்சிகள் தான் சிக்குகின்றன. வசதி படைத்த பண முதலைகள் வலையை கிழித்து தப்பி விடுகின்றன.



முன் ஜாக்கிரதை மிக அவசியம்!


வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம், ஹாத்ரஸ்மாவட்டம், சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நடைபெற்ற மத வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 121 பேர் உயிரிழந்தனர். பலர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆன்மிகம் தொடர்பான நெரிசல் சம்பவங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள், அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தேசிய குற்றப் பதிவேட்டின்படி, 2000 முதல் 2013 வரையிலான 13 ஆண்டுகளில், 2,000 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:

கடந்த, 2003, ஆகஸ்ட் 27-ல், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தின் கும்பமேளா நெரிசலில், 39 பேர் உயிரிழந்தனர்.

இதே மாநிலத்தில், 2005, ஜனவரி 25ல், சத்தரா மாவட்டத்தின் மந்தரா தேவி கோவிலின் விசேஷத்தில், 340 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல் பிரதேசத்தின், பிலாஸ்பூர், நைனா தேவி கோவில் நெரிசலில், 2008, ஆகஸ்ட் 3ல், 146 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான், மாநிலம், ஜோத்பூரில் சாமுண்டா தேவி கோவிலில், 2008, செப்டம்பர் 30ல், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் 224 பேர்.

உ.பி.யின் பிரயாக்ராஜில், ராம் ஜானகி கோவிலில் கிருபாளு மஹராஜ் எனும் ஆன்மிகக் குரு வழங்கிய இலவச வேட்டி - சேலை வினியோகத்தில், நெரிசல் ஏற்பட்டது; மார்ச் 4, 2010-ல் நடந்த இந்த சம்பவத்தில், 63 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரி மலையில்,  2011 ஜனவரி 14 அன்று, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப்பால், 102 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தின் டாட்டியாவில் ரத்னாகர் கோவிலில், 2013, அக்டோபர் 13ல் பாலம் உடைவதாக கிளம்பிய புரளியால் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர்.

பீஹாரில், 2014, அக்டோபர் 3ல், பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் 32 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவின், புட்டிங்கல் கோவிலில், 2016, ஏப்., 10ல் ஏற்பட்ட நெரிசலில், 106 பேர் பலியாகினர்.

இப்படிப்பட்ட நீண்ட உயிரிழப்பு பட்டியலைக் காண்பது வேதனையானது.

கூட்டம் கூடும் இடங்கள் என, கண்டறியப்படும் இடங்களைச் சுற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது அரசின் கடமை. விழா ஏற்பாட்டாளர்களும், அது நடக்கும் இடத்தின் அருகாமையில் மருத்துவ வசதிகள் உள்ளதா, முதலுதவிகள் கொடுக்க வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பல சம்பவங்கள் நடந்தும்,அலட்சியம் காரணமாக இது போன்ற பேரிழப்புகளை நாம் சந்தித்தபடியே இருக்கிறோம்.

இது போன்ற விஷயங்களில் முன் ஜாக்கிரதையை கைகொள்ளாமல், வேறெந்த விஷயத்தில் முன்னேறினாலும் அர்த்தமே இல்லை.








      Dinamalar
      Follow us