/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தமிழர்கள் மீது வெறுப்பை கக்கலாமா?
/
தமிழர்கள் மீது வெறுப்பை கக்கலாமா?
PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

என். வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆள அனுமதிக்கலாமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒடியா மொழி பேசும் இளைஞர் ஒருவர் தான் ஆட்சி செய்வார்' என்று, தமிழர்கள் மீது தன் வெறுப்பைக் கொட்டி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரிய தனிச் செயலராக இருந்து, தன் அரசுப் பணியை ராஜினாமா செய்தார் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற தமிழர். இவர் கடந்த ஆண்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவான பிரசாரத்தை வி.கே. பாண்டியன் வழிநடத்தி வருகிறார். இவரை மனதில் வைத்து தான் அமித் ஷா, ஒடிசாவைத் தமிழர் ஆள அனுமதிக்க முடியாது என, தெனாவெட்டாக பேசி இருக்கிறார்.
இந்த நாட்டில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆள வேண்டும் என்று அரசியல் சட்டம் சொல்லவில்லையே? நம் நாட்டை ஆண்ட பிரதமர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களை, குறிப்பாக, உ.பி.,யை சேர்ந்தவர்களாகத் தான் இருந்துள்ளனர்.
இதற்காகவே, குஜராத்தில் பிறந்த மோடியும், லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் போட்டியிடாமல் உ.பி.,யில் உள்ள வாரணாசியில் போய் போட்டியிடுகிறார்.
ரப்பர் ஸ்டாம்ப் பதவியான ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு மட்டும் வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்ற தமிழர்களுக்கு கிடைத்தது. ஆனால், பிரதமராக ஆகும் வாய்ப்பு இதுவரை தமிழர்களுக்கு கிடைக்கவில்லையே? இதற்கு அமித் ஷா என்ன பதில் சொல்வார்?
தமிழகத்தை ஆளும் வாய்ப்பு, தெலுங்கரான ஓமந்துார் ரெட்டியாருக்கும், மலையாளியான எம்.ஜி.ஆருக்கும் கிடைத்தது. அப்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூட, 'தமிழகத்தை மலையாளிகள் ஆக்கிரமித்து விட்டனர்' என, பிரசாரம் செய்து பார்த்தார். ஆனால், அதை தமிழர்கள் புறக்கணித்து, தொடர்ந்து மூன்று தேர்தல்களில், எம்.ஜி.ஆருக்கு முடிசூடினர்.
தமிழகத்தை தமிழன் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழர்கள் நினைத்து இருந்தால், இவர்கள் இரண்டு பேரும் முதல்வர் ஆகியிருக்க முடியாது. தமிழர்கள் மீது அமித் ஷா இப்படி வெறுப்பை காட்டுவதற்கு, அண்ணாமலை போன்ற தமிழர்கள் என்ன நியாயம் சொல்வர்?
நம் தேசத்திற்கு பெருமையல்ல இது!
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஏழை எளிய மக்கள், தாங்கள் வசிப்பதற்கு ஒரு குடியிருப்பு கட்டுவதற்கோ
அல்லது பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவோ, திருமணங்களுக்காகவோ, சிறுகச் சிறுக
சேமித்து வைக்கும் பணத்தை, வீட்டில் வைத்திருந்தால் திருடு போய்விடும்
என்ற காரணத்தால், வங்கிகளை நம்பி போட்டு வைக்கின்றனர்.
நம் பிரதமரும், வங்கிகள்மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள்என்று கியாரன்டி கொடுக்கிறார்.
ஆனால், வங்களில் போடப்படும் ஏழைகளின்பணம், வங்கிகளுக்கே தெரியாமல் களவு போகிறது.
டிஜிட்டல்
இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்த காலங்களில், இது மாதிரியான திருட்டு
நடைபெறவில்லை. ஆனால் வங்கிகளில் பணம் எடுக்க சற்று தாமதமாகும். ஏழை
எளியவர்களின் பணம், பாதுகாப்புடன் இருந்தது.
மேலும் வங்கியில்
போட்டு வைத்த பணம், வங்கிகள் கொடுக்கும் வட்டிப் பணத்தால் கூடியிருக்கும்.
ஆனால் தற்போது, வங்கிகள் நம் பணத்தை, நம் அனுமதி இன்றி, சேவைக்
கட்டணம்,மெஸேஜ் கட்டணம், ஏ.டி.எம்., கட்டணம் என, பல கட்டணங்களாக சுரண்டி
விடுகிறது.
ஒருவரின் பொருளையோ பணத்தையோ, அவரின் அனுமதி இன்றி எடுப்பது, களவாடுதல் தானே!
ஏ.டி.எம்.கார்டு
என்ற பணம் எடுக்கும் சாவியை, வங்கிகள் நம் கையில் கொடுக்கின்றன. ஆனால்
அந்த சாவியில்லாமல், யார் யாரோ நம் பணத்தை எடுத்து விடுகின்றனர். இதற்கு
வங்கிகள் பொறுப்பேற்பது இல்லை. இது ஏன் என்று தெரியவில்லை. அவர்களிடம் தானே
நாம் பணம் போட்டு வைத்திருக்கிறோம்?
நம் நாட்டு வங்கிகளால், ஏழை எளிய மக்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்புடன் வைக்க முடியவில்லை என்பது வேடிக்கையாகவுள்ளது.
வீட்டில்
வைக்கும் பணம் திருடு போனால் காவல் துறையினர் மீட்டுக் கொடுத்துவிடுவர்.
வங்கிகளில் திருடு போன பணம், திரும்பி வரும் என்பதற்கு, கியாரன்டி
கிடையாது.
இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு
கூட, உரியவரின் கை ரேகை வைத்தால் தான் வாங்க முடியும். ஆனால்
லட்சக்கணக்கான ரூபாயை யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் எடுக்கலாம்
என்பது, பல டிஜிட்டல் வல்லுனர்களை பெற்றுள்ள நம் தேசத்திற்கு பெருமை
சேர்க்காது.
காமராஜர் ஆட்சி பற்றி தெரியுமா?
கே.முத்துகிருஷ்ணன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இக்கால தலை
முறையினருக்கு கர்மவீரர் காமராஜர் பற்றி தெரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
இன்று பல தலைவர்களும், ஆட்சியாளர்களும், 'இப்போது நடப்பதே காமராஜர் ஆட்சி
தான்' என்று கிணற்று தவளைகளாக கூவிக்கொண்டு திரிகின்றனர். இதை செவியுறும்
இன்றைய தலைமுறையினர், 'ஓஹோ இப்படித் தான் காமராஜர் ஆட்சி செய்தார்
போலிருக்கிறது' என்று எண்ணிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
வ.உ.சிதம்பரம்
பிள்ளையை அடிக்கடி சந்திக்க, காமராஜர் கோவில் பட்டி வரும் வழக்கமுண்டு.
அந்த வகையில் ஒரு முறை, தான் தில்லையாடி சென்றிருந்ததையும், அங்கு வேதியன்
பிள்ளை என்பவர், பெண்களுக்காக ஒரு பாடசாலையை நடத்தி வருவதை பற்றியும்
வ.உ.சிதம்பரம் கூறினார்.
மேலும், துவக்கத்தில் அதில் இரண்டு அல்லது
மூன்று பெண்களே படித்து வந்தனர் என்றும் பின்பு இலவச மதிய உணவு கொடுக்கத்
துவங்கியதும், 30 பெண்களுக்கு மேல் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர் என்றும்
கூறினார்.
இதை மனதில் நிறுத்தி கொண்ட காமராஜர், தான் தமிழக முதல்வர்
ஆனதும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை
அறிமுகப்படுத்தி, முதன் முதலில் அதை, பாரதியார் படித்த எட்டயபுரம்
பள்ளியில் துவக்கி வைத்தார். இவ்வாறாக அல்லும் பகலும் மக்கள் நலனும்,
நாட்டு நினைப்புமே அவரது உள்ளத்தில் குடி கொண்டிருந்தது.
ஆனால், சதா
சர்வகாலமும் தம் சொந்த மக்கள் நலனும், கட்சியினர் நலனையும் மட்டுமே
கருத்தில் கொண்டிருக்கும் இந்த கால அரசியல்வாதிகள் எங்கே. ஆகவே, காமராஜர்
ஆட்சியுடன் இந்தியாவில் தற்போது எந்த மாநிலங்களிலும் நடக்கும் ஆட்சியையும்
ஒப்பிடவே முடியாது என்பதே உண்மை.

