PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM
கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என, அக்கட்சி எம்.பி., ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதைக் கேட்கவே வருத்தமாக உள்ளது. 'பெண்களுக்கு பணம் மட்டுமே பாதுகாப்பு' என்று, அரசியல் தலைவர்கள் நெஞ்சில், ஸ்டிக்கர் போட்டு ஒட்டி வைத்துள்ளனர் போலும்.
போதும் இனி, இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்.
அரசியல்வாதிகள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்பதற்காக, பாரத நாட்டுப் பெண்கள் எல்லாரும், பிச்சையெடுப்பவர்கள் என்று அர்த்தமல்ல; அந்தக் காலம் மலையேறி விட்டது.
இன்று ஆண்களுக்கு சமமாக பெண்களும், போட்டி போட்டு சம்பாதிக்கத் துவங்கி விட்டனர். அதையும் மீறி எங்கள் பெண்களுக்கு, அண்ணன், தம்பி, அப்பா, கணவன் என நிறைய பேர், பக்கபலமாக இருக்கிறோம்.
பிரச்னை அதுவல்ல!
பட்டப்பகலில் கூட ஒரு பெண்ணால் இன்று, தனியாக வெளியில் நடமாட முடியவில்லை.
பாட்டி முதற்கொண்டு, பல் முளைக்காத பச்சிளம் பெண் குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். அரசியல் சட்டமும், வழக்கு - வாய்தா என்று, கைகட்டி அதை வேடிக்கை தான் பார்க்கிறதே தவிர, பெண்களைப் பாதுகாப்பதாய் இல்லை.
பெண்களின் வங்கிக் கணக்கே இல்லாவிட்டாலும் பரவாயில்லை... அவர்கள் தைரியமாக, தனியாக வெளியே சென்று, காய்கறி வாங்கி வரும் அளவிற்காவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; அது போதும்!
அத்தனை அரசியல் கட்சிகளும், மாங்கு மாங்கு என்று, பணம் தந்து வாயடைப்பதிலேயே உறுதியாக இருக்கின்றனவே தவிர, 'பெண்கள் பாதுகாப்புடன் நடமாட நாங்கள் அரணாக இருப்போம்' என்ற வாக்குறுதி கொடுக்கிறதா... இல்லையே?
மக்களுக்கு புரிய வேண்டும் இது!
அ.குணசேகரன்,
வழக் கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், செல்வந்தர்கள் முதல் கட்சியின் அடிமட்ட
தொண்டர்கள் வரை, அனைவரிடமும் நிதியுதவி பெற்று, தேர்தல்களை சந்தித்து
வருவது வழக்கமாக இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சிகள், உண்டியல் குலுக்கி நிதி வசூல் செய்து வந்ததையும் நாம் அறிவோம்.
தேர்தல் வருவதற்கு ஓராண்டு முன்பாகவே, கையேந்தத் துவங்கி விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
வேட்பாளர்களோ, கோடிகளில் புரண்டால் தான், தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்கும்.
அப்படி
இருக்கையில், தேர்தல் நிதியுதவி பெறுவதை, குற்றமாகக் கருத இடமில்லை. 'இந்த
தேர்தலில் இந்த கட்சித் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது'
என்பதை முன்கூட்டியே அறியும் மிகப் பெரிய செல்வந்தர்களும்,
தொழிலதிபர்களும், தாங்கள் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்வதற்காக,
சம்பந்தப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதை வழக்கமாகக்
கொண்டிருக்கின்றனர்.
பலமான எதிர்க்கட்சியாக வரக்கூடிய கட்சிக்கும் நிதியுதவி செய்வது வழக்கம் தான்.
இந்தப் பணம் எதுவும் கணக்கில் வராது என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்தப்
போக்கை, ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அனைத்தையும் கணக்கில் கொண்டு வர
வேண்டும் என்ற எண்ணத்தில் தான், தேர்தல் பத்திரங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன.
வழக்கம் போலவே, 2019ல் இருந்து தற்போது வரை
மத்தியில் மிகவும் பலமாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.,வுக்கு, 6,060 கோடி
கிடைத்திருக்கிறது. இதில் வியப்பென்ன?
நாட்டின், 18 மாநிலங்களில் இக்கட்சி ஆட்சியில் இருப்பதால், இந்தத் தொகை கிடைத்திருக்கிறது. ஆச்சரியமா இது?
அதிர்ச்சி
அடைய வேண்டிய விஷயம், ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும் திரிணமுல்
காங்., கட்சிக்கு, 1,609.53 கோடி ரூபாய் நன்கொடை வந்திருக்கிறது என்பது
தான்!
தி.மு.க.,வுக்கு, 639 கோடி ரூபாய்.
தேர்தல்
பத்திரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசுக்கு எவ்வளவு
நன்கொடை வந்துள்ளது தெரியுமா... 1,421.85 கோடி ரூபாய்.
மக்களுக்குப் புரிய வேண்டும் இது!
வழிகாட்டும் மிசோரம்!
வெ.
சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை
உறுப்பினர்களின் சலுகைகள், அதிகாரபூர்வமான உரிமைகள் பலவற்றைக் குறைக்கும்
நான்கு மசோதாக்களை, கடந்த 14ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றி, மிசோரம் மாநில
அரசு சாதனை படைத்துள்ளது. ஒரு சிறிய மாநிலத்திற்கு, எத்தனை பெரிய இதயம்,
தைரியம் பாருங்கள்!
இதன் மூலம் கிட்டத்தட்ட, 13 கோடி ரூபாய்க்கு மேல் ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு சேமிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு
சிறிய மாநிலத்திற்கே இத்தனை சேமிப்பு என்றால், மத்திய அரசிலும், அனைத்து
மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டால், எவ்வளவு பெரிய தொகையை சேமிக்க
முடியும்!
அதை வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பலன்தரக் கூடிய, எத்தனை மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியும்!
கட்சிகள்,
தேர்தல்களில் தங்கள் சார்பில் நிற்கும் வேட்பாளர்களிடம் கேட்கும் முதல்
கேள்வியே, 'தேர்தல் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியுமா?' என்பதே. அதற்கு
பிறகு தான் ஜாதி, மத விசாரிப்புகள்.
கோடீஸ்வரர்கள், அரச
பரம்பரையைச் சேர்ந்தவர்கள், பெரிய வியாபாரிகள், கோடி கோடியாய் ஏற்கெனவே
பணம் சம்பாதித்து வைத்துள்ள அரசியல்வாதிகளின் வாரிசுகள் போன்றவர்களே
பெரும்பாலும் தேர்தல்களில் நின்று வெற்றி பெறுகின்றனர்.
கர்நாடகத்தில்,
காங்கிரஸ்எம்.எல்.ஏ.,வும், துணை முதல்வருமான சிவகுமாருக்கு 1400 கோடிக்கு
மேல் சொத்துக்கள் இருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிக பணக்கார சட்டசபை
உறுப்பினர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர, நம் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சபாநாயகர்கள், பார்லி., உறுப்பினர்கள், 'இதர வழிகளிலும்' பணம் சேமிக்கின்றனர்.
மக்களுக்குச்
சேவை செய்வதாகக் கூறி அரசியலுக்கு வருபவர்கள், இலவசமாக அல்லவா சேவை செய்ய
வேண்டும்! போனால் போகிறதென்று, அவர்கள் ஜீவனம் நடத்த வேண்டுமே என்று,
அவர்களக்கு சம்பளம் கொடுக்கிறோம்.
ஆனால், 'கொழுத்த' சம்பளம், பிற வசதிகள், அதிகாரபூர்வ உரிமைகள், 'கொழுத்த' ஓய்வூதியங்கள் தேவையா?
சிறிய மாநிலமான மிசோரம் செய்து காட்டியுள்ளதை, எந்த மாநிலம் பின்பற்றப் போகிறதோ தெரியவில்லை!

