தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஓட்டளிக்கும் ஆர்வமே காணோம்!

ஓட்டளிக்கும் ஆர்வமே காணோம்!

ஓட்டளிக்கும் ஆர்வமே காணோம்!


PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்பெல்லாம், பஞ்சாயத்து தேர்தல் முதல் பார்லிமென்ட் தேர்தல் வரை எது நடந்தாலும், ஒரு புது திரைப்படம் பார்க்கும் ஆவலோடு, ஓட்டுச்சாவடி திறப்பதற்கு முன்பே சென்று வரிசையில் நின்று ஓட்டளித்து விட்டு வருவோம்.

நம் வாக்கை பதிவு செய்ததற்காக, இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மையை பெருமையுடன் பார்ப்பதோடு, போகிறவர், வருகிறவர் அனைவரிடமும் காட்டி புளகாங்கிதமடைவோம்.

ஆனால் தற்போது, தேர்தல் ஏன் வருகிறது, நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கேள்விகள் நம் மனதை குடைகின்றன.

'தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது காவல் துறை வழியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷனும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கும்' என்று பேட்டி அளித்து இருக்கிறார் நம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.

கடந்த, 2019ல் நடந்த தேர்தலின் போது, முறைகேடுகளில் ஈடுபட்ட எத்தனை பேர் மீது, காவல் துறையும், தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுத்துள்ளன என்று, நம் மூளைக்கு எட்டும் வகையில், அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.

அதை விடுங்கள்...

 போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கல்வித் தகுதி என்ற ஒன்றை நிர்ணயிக்க மாட்டார்கள்

 ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதையும் தடுக்க மாட்டார்கள்

 ஊழல் வழக்குகள், கிரிமினல் குற்றங்கள், அன்னிய செலாவணி மோசடிகள் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முன் வர மாட்டார்கள்.

கேட்டால், 'வழக்கு நிலுவையில் உள்ளது; குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்; குற்றம் நிரூபிக்கப்படவில்லை; நீதிமன்றம் இன்னும் தண்டனை அளிக்கவில்லை' என்று, ஏதாவது காரணம் சொல்வர்.

ஆக, தகுதியற்ற வேட்பாளர்களை போட்டியிட அனுமதித்து, அந்த தகுதியற்ற பேர்வழிகளை நம்மைக் கொண்டே தேர்ந்தெடுக்க வைத்து, பழி முழுவதையும் நம் தலையிலேயே திருப்பி போட்டு... என்னே ஜனநாயகம்!

இதனாலேயே, தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் போகிறது.



மாநகர வாக்காளர்களுக்கு வேண்டுகோள்!


அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு தேர்தலிலும், நகர்ப்புறத்தை விட, கிராமப்புற வாக்காளர்கள் அதிக அளவில் ஓட்டு போடுகின்றனர்.

ஆனால், மாநகரம் மற்றும் நகரங்களில் வசிக்கும் வாக்காளர்கள், ஓட்டுப் பதிவு நாளை, விடுமுறை தினமாகக் கருதி, வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். யோசித்துப் பார்த்தால், அரசின் மொத்த சலுகைகளையும் இவர்கள் தான் அனுபவிக்கின்றனர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஒட்டுமொத்தமாக 71.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தாலும், சென்னை மற்றும் கோவை போன்ற மாநகரங்களில் விழுந்த ஓட்டுப் பதிவு, 50 - 65 சதவீதமே.

தற்போது கோவையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போட்டி இடுகிறார். அரசியலுக்காக, ஐ.பி.எஸ்., பதவியை துாக்கி எறிந்தவர். கோவை மக்கள் எத்தனை பேர், இவருக்கு ஓட்டு போடுகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும்!

கடைசியாக நடந்த கோவை மாநகராட்சி தேர்தலில், தி.மு.க.,வினர் ஒவ்வொரு வார்டிலும், பணத்தை வாரி வாரி இறைத்து வெற்றி பெற்றனர். சென்னையிலும் இதே நிலை தான் என்பதை, ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

தற்போது தென் சென்னை யில், தன் இரண்டு மாநில கவர்னர் பதவியையும் துறந்து, தமிழிசை களமிறங்குகிறார். சென்னை மக்கள் மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருந்தால், தன் மாநிலமான துாத்துக்குடியை விடுத்து, இங்கு போட்டியிடுவார் பாருங்கள்!

இவர்களை மட்டும் ஏன் நான் உதாரணமாக எடுத்தேன் என்றால், ஐ.ஏ.எஸ்., சிவகாமியைப் போல, தன் உயர்ந்த ஐ.பி.எஸ்., பதவியை விட்டுக் கொடுத்து, அரசியலுக்கு வந்துள்ள அண்ணாமலையும்; அரசியலில் பல ஆண்டுகள் கோலோச்சினாலும், அலுங்காத மேனியாய் பணி செய்யக் கூடிய கவர்னர் பதவியை கைவிட்டு, மக்களுக்காக களமிறங்கி பணி செய்யப் போகிறேன் என்று வந்துள்ள தமிழிசையையும் பாராட்ட வேண்டும் என்பதற்காக!

ஓட்டு போடுங்கள் மாநகர மக்களே!



கோட்டை விட்டார் பன்னீர்செல்வம்!


கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் வரலாற்றில், நாவலர் நெடுஞ்செழியனுக்கும், பேராசிரியர் அன்பழகனுக்கும் தனி இடம் உண்டு.

இருவருமே நன்கு படித்தவர்கள்; திறமைசாலிகள்; அறிவாளிகள். தமிழக அரசில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் பெற்றவர்கள்.

அண்ணாதுரை காலம் முதல் ஜெயலலிதா வரை, பல்வேறு பொறுப்புகளில் நெடுஞ்செழியன் இருந்துள்ளார்.

அன்பழகனும், அண்ணா துரை காலம் முதல் கருணாநிதி காலம் வரை இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அண்ணா துரை மறைவிற்கு பின், தமிழக முதல்வராகும் வாய்ப்பு நெடுஞ்செழியனுக்கு தான் கிடைத்தது. ஆனால், கருணாநிதி தன் சூழ்ச்சியால், முதல்வர் ஆகி விட்டார்.

இருப்பினும் நெடுஞ்செழியன், பிரச்னை செய்யாமல் இரண்டாமிடத்திலேயே தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

பின் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அ.தி.முக.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்கிய பின், எம்.ஜி. ஆருடன் சேர்ந்தார். இங்கும், இரண்டாம் இடம் தான்.

அன்பழகனும், கடைசி வரை, கருணாநிதியுடன், 'பிடில்' ஆகவே இருந்து விட்டார்.

பன்னீர்செல்வம் கதைக்கு வருவோம்...

ஜெயலலிதாவிடம் நற்பெயர் எடுத்ததன் காரணமாக, அவருக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம், முதல்வராக ஆக்கப்பட்டவர் பன்னீர்செல்வம்.

ஜெ., மறைவிற்கு பின், சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டு, பழனிசாமி முதல்வரானார். ஆனால், அவர் போக்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு, சசிகலாவையும் ஓரங்கட்டி,கட்சியை அபகரித்தார்.

இவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி, அ.தி.மு.க.,வை பலப்படுத்த பா.ஜ., முயற்சி செய்தபோது, கட்சித் தலைமை பொறுப்பை கேட்டு வாங்க பன்னீருக்குத்தெரியவில்லை; மாறாக, துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

நெடுஞ்செழியன், அன்பழகனை போல் யோசித்து இருந்தால், இன்று இரண்டாம் இடத்தில் கொண்டு தன்னையும், தன் ஆதரவாளர்களையும் நிலை நிறுத்தி கொண்டு இருக்கலாம். ஆனால், கோட்டை விட்டார் பன்னீர்செல்வம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us