/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
வாரிசு அற்றவர்களுக்கு போடுவோம் ஓட்டு!
/
வாரிசு அற்றவர்களுக்கு போடுவோம் ஓட்டு!
PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்து, 78 வருடங்கள் உருண்டோடி விட்டன.
அனைத்து வளமும் பெற்று, வளமோடு வாழ்வோம் என நினைத்தோம்; நடந்தது என்ன... இரவு உணவு இன்றி உறங்கச் செல்பவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர் என்கிறது ஒரு சர்வே.
கடந்த, 1970 முதல், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என அனைவரும், சொத்துக்களை வாங்கிக் குவித்த வண்ணம் உள்ளனர். வாரிசுகள், உறவினர்கள் என, நெருக்கமானவர்களைக் களத்தில் இறக்கி, அவர்கள் மூலமும் சம்பாத்தியம் நடக்கிறது.
அதன் விளைவு என்ன தெரியுமா? 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 475 பேர், அதாவது 88 சதவீதம் பேர், கோடீஸ்வரர்களாக இருந்தனர். தற்போதும் கிட்டத்தட்ட அதே நிலை தான்.
அ.தி.மு.க.,வில், ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு, 500 கோடி ரூபாய்க்கு மேல்.
அவராவது உண்மையை கூறியுள்ளார்.
தி.மு.க., வேட்பாளர்களாக உள்ள, தயாநிதி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கனிமொழி, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, அருண் நேரு போன்றவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது, அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
இப்படி, மெகா கோடீஸ்வரர்கள் மட்டுமே இன்றைய தேர்தல்களில் நிற்க முடியும் என்றால், உண்மையான, நேர்மையான மக்கள் சேவகர் எப்படி தேர்தலில் நின்று வெற்றிப் பெற முடியும்?
இந்த கோடீஸ்வரர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படித்திருக்க மாட்டார்கள்; அரசு மருத்துவமனையில் இவர்கள் யாரும் வைத்தியம் செய்து இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி ஏழை, எளிய மக்களின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்?
இவர்கள் சில கோடிகளைச் செலவு செய்து, வெற்றி பெற்று, பல கோடிகளை ஈட்டி விடுவர். ஓட்டு போட்ட, 99 சதவீத ஏழை, எளியவர்கள், வாயைப் பிளந்து பார்த்தபடி இருக்க வேண்டியது தான்.
எனவே, வாரிசுகள் அற்ற கட்சிக்கு ஓட்டு போட்டு, நம்மை நாமே வாழ வைத்துக் கொள்வோம்!
ஓட்டு போடுவோம், வாருங்கள்!
கே.ஜே.செல்வராஜ்,
கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில் கடிதம்:
பதினெட்டாவது லோக்சபா தேர்தல், இன்று நடக்க உள்ளது.
ஏற்கனவே ஒரு
வாசகர் இப்பகுதியில் குறிப்பிட்டது போல், ஒரு நாளில், ஒரே ஒரு வேளை நாம்
சோம்பிக் கிடந்தால், ஐந்தாண்டு காலம் அவதிப்பட நேரிடும்.
இன்றைய
அரசியல்வாதிகளின் கோமாளித்தனமான அறிவிப்புகளும், ஆட்சியாளர்களின் அரை
வேக்காட்டுத்தனமான வாக்குறுதிகளும், நம் போன்றவர்களைக் கடுப்பேற்றும்
காரியம் தான் என்றாலும், கடமையை ஆற்றுவதிலிருந்து தவறக் கூடாது என்பதை நாம்
உணர வேண்டும்.
நம் கருத்துக்கும், நம் அறிவுக்கும் ஒத்துப் போகாத
அரசியல் கட்சியும், கட்சித் தலைவர்களும் இருந்தால் நமக்கென்ன... ஓட்டுரிமை
நம் உயிர் போன்றது; அதை மதிக்க வேண்டும்.
நோட்டாவுக்குப் போட்டாலும் பரவாயில்லை; ஓட்டே போடாமல் இருந்துவிட்டால், அது சரியில்லை. எனவே, ஓட்டு போடுவோம் வாருங்கள்!
அறிவிப்பு வெளியிட்டது ஏன்?
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், 17 காலை 10:00 மணி முதல்,
19 நள்ளிரவு 12:00 மணி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம்
தேதியும் மதுக்கடைகள், கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
துறை ஆணையர், மாவட்ட மேலாளர்களுக்கு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேற்கண்ட நாட்களில் முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க, உரிய நடவடிக்கை
எடுக்குமாறும் கூறியுள்ளார்.
'நாலு நாள் லீவுங்க' என, ஊடகங்கள்
வாயிலாக இவர் சொல்வதைப் பார்த்தால், எல்லாரையும் முன்கூட்டியே பாட்டில்
வாங்கி வைக்க அறிவுறுத்துவது போல் தோன்றுகிறது.
குடிநீர் வினியோகம்,
மின்சார வினியோகம், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியமான சேவைகள்
தடைபடுவதாக இருந்தால், அந்த தகவலை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு
முன்கூட்டியே தெரிவித்தால், அதை வரவேற்கலாம். டாஸ்மாக் விற்பனையைக்
குறைத்தால் வருமானம் போய்விடும் என்பதால், அறிவிப்பு வெளியிட்டு விட்டனரோ?
உரிமைத்தொகை கடன் நம் தலையில் தான்!
ஆர்.ரவீந்திரன்,
கம்பம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தின் தற்போதைய கடன் 8.5 லட்சம் கோடி ரூபாய். தி.மு.க., ஆட்சியில்
அமர்ந்து, 35 மாதங்கள் ஆகும் நிலையில், 3.5 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன்
வாங்கியுள்ளது. மாதம் ஒன்றுக்கு, சராசரியாக, 10,000 கோடி ரூபாய், நாள்
ஒன்றுக்கு, 333 கோடி.
அதாவது, ஒரு நாள் அரசு நடத்த, 333 கோடி புதிய
கடன் வாங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாத வட்டியாக, 1,000 கோடி
சேர்ந்து, மாதா மாதம் 11,000 என்றும், 12,000 கோடி என்றும் கூடிக் கொண்டே
இருக்கும்.
இந்த லட்சணத்தில், கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை,
இலவச பஸ், இன்னும் பல இலவசங்கள் என்று மக்களின் ஆசைகளை துாண்டி,
அறுவடைசெய்யப்படுகிறது.
சமீபத்தில், ஒருவர், 'மகளிர் உரிமைத் தொகையை
யாரும் தன் வீட்டிலிருந்து கொடுக்கவில்லை; கடன் வாங்கித்தான்
கொடுக்கிறார். அதை அவர் அடைக்கப் போவதில்லை; நீங்கள் தான் அடைக்க வேண்டும்'
என்று, உண்மையை உரக்கச் சொன்னார்.
வாக்காளர்கள் வீட்டை யும்,
நாட்டையும், அடுத்த தலைமுறையையும் காப்பாற்றும் வகையில் யோசி த்து
நல்லவர்களுக்கும், திறமையுள்ளவர்களுக்கும் ஓட்டளிக்க வேண்டும்.
போலி நாடகம் அனைத்தையும் இழக்க வைக்கும்!
குரு
பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெரும்பான்மை
சமூகத்தை அவமதிப்பதிலும், சிறுபான்மையினரை தாஜா செய்வதிலும்,
தமிழ்நாட்டின் இரு சக்திகளும், ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டி போட்டு,
தாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என, நாள்தோறும் நிரூபித்துக்
கொண்டிருக்கின்றன!
ஒன்றை மட்டும், இந்த போலி மதச்சார்பற்ற, சிறுபான்மை தாஜாகாரர்கள், புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது
இவர்கள் அவமதிக்கும், இதே பெரும்பான்மை இனத்தவர்கள், எங்கள் பகுதிக்கு
வராதே என, ஒன்றுபட்டு இவர்களை விரட்டி அடித்தால் என்ன நடக்கும்?
இவர்களின், சிறுபான்மை இன பாசம் எனும் சாயம் வெளுக்கும்; யதார்த்தம் விளங்கும்!
இவர்கள் இப்படியே போலி நாடகம் ஆடினால், சிறுபான்மையினர் கூட ஒதுக்குவர்.

