/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நியாய பத்திரம் அல்ல; அநியாய பத்திரம்!
/
நியாய பத்திரம் அல்ல; அநியாய பத்திரம்!
PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

பி.ஜோசப், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நியாய பத்திரம் என்ற தலைப்பிட்டு, 47 பக்கங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, அதில் முக்கியமானதாக, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு வேலைகளில் சரிபாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்' என்று வாக்குறுதி வழங்கியுள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
மொத்தமுள்ள 544 பார்லிமென்ட் தொகுதிகளில், 'இண்டியா' கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற விபரமே இன்னும் முடிவாக தெரியவில்லை.
அப்படியே அந்த இண்டியா கூட்டணி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றாலும், அந்த கூட்டணியில் இருந்து, யாரை பிரதமராக தேர்வு செய்வர் என்பதும் மர்மமாகவே உள்ளது.
சர்வ சத்தியமாக, ராகுலை பிரதமராக அந்த இண்டியா கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளாது.
நிலைமை இந்த லட்சணத்தில் இருக்க, 'காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு வேலைகளில் சரிபாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என்பதும், 'ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்பது எவ்வளவு பெரிய டுபாக்கூர் வாக்குறுதிகள்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த டுபாக்கூர் வாக்குறுதிகளையே விழுங்கி ஏப்பம் விடும் அளவில் அல்லவா இந்த நியாய பத்திர வாக்குறுதி உள்ளது!
தமிழ் நாட்டில் கழகக் கூட்டணி, காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொன்னோம் அல்லவா... மத்திய அரசு வேலைகளில் சரிபாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்குவது இருக்கட்டும்.
கடந்த, 2019 பார்லிமெண்ட் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 10 வேட்பாளர்களில் ஜோதிமணியை தவிர எத்தனை பெண் வேட்பாளர்களை, காங்கிரஸ் போட்டியிட வைத்துள்ளது?
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு புரிந்ததா இப்போது?
இப்போது சொல்லுங்கள், நியாயப் பத்திரமா, அநியாயப் பத்திரமா அது?
பயத்தின் வெளிப்பாடே இந்த உளறல்கள்!
எஸ்.கணபதி
வெங்கட்ராமன்,சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மோடி
மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், அம்பேத்காரின் அரசியல் சாசனத்தை
ஆர்.எஸ்.எஸ்., சாசனமாக மாற்றி விடுவார்' என்கிறார், நம் நாட்டின் முன்னாள்
நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
'மோடி ஆட்சி மீண்டும் வந்தால், கல்லுாரிகளுக்குக் கூட நுழைவுத் தேர்வு வரும் என்று பயமுறுத்துகிறார்' என்கிறார் கனிமொழி.
மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர், 'மீண்டும் மோடி வந்தால், மாநிலங்களே இருக்காது; தேர்தல் நடக்காது' என்கிறார்.
இவர்களாவது பரவாயில்லை... நேற்று ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.
பிரசாரத்தில்
ஒருவர், 'மோடி மறுபடி வந்தார்னா, நாம எல்லாம், மூணு வேளையும் புளியோதரை,
தயிர் சாதமும் தான் சாப்பிடணும்; பிரியாணியை எல்லாம் மறந்துடணும்' என
பேசியிருக்கிறார். அபத்தத்தின் உச்சகட்டம்!
'மோடி வந்தால், ஹிந்து -
முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு, நாட்டில் ரத்த ஆறு ஓடும்; காஷ்மீர் காணாமல்
போகும்; பாகிஸ்தான் படையெடுக்கும்' என்று பதறினர். என்ன நடக்கிறது என்பதை
நாம் கண்முன்னே பார்க்கிறோமே! தென் மாநிலத்தவர் கூட, சுலபமாக காஷ்மீர்
சென்று வர முடிகிறதே!
'மோடி வந்தால், தேசம் சாமியார் மடமாகும்' என்றனர். நடந்ததா?
இப்போது,
'நாடு விற்கப்படும்; நாட்டில் தேர்தலே இருக்காது; கட்சிகளே இருக்காது;
சட்டங்கள் இருக்காது; பெண்கள் நடமாட முடியாது; மக்கள் பிச்சை எடுப்பர்;
விவசாயிகள் வாழ முடியாது' என்றெல்லாம், ஜன்னி கண்டவர்கள் போல உளற
ஆரம்பித்திருக்கின்றனர். இப்படி உளறுபவர்கள் அனைவரும், 'விட்டமின் ப'
விஷயத்தில், மோடியிடம், 'பலத்த கிடுக்கி' வாங்கி விட்டனரோ என, நினைக்கத்
தோன்றுகிறது.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இப்படி செய்வோம்; அப்படி செய்வோம்' என்கின்றனர். மூன்றாண்டில் என்ன செய்தனர்... புரியலியே?
தெனாலி
என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் வரிசைப்படுத்தும் பயங்களின் வரிசையில்,
'மோடிபோபியா'வையும் சேர்த்து விடலாம். ஜூன் 4 வரை, இந்த போபியா தொடரும்;
உளறல்கள், சும்மா கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும். பொதுமக்கள் யாரும்
பயந்து விட வேண்டாம்!
காத துாரம் ஓடப்போவது யார், எது?
கே.ஆர்.பிரேம்குமார்,
பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாரத பிரதமருக்கு,
தமிழ் கற்று கொடுக்க, தேர்தலுக்கு பிறகு, ஆசிரியரை அனுப்பப் போவதாக கனிமொழி
கூறுகிறார்.
அந்த ஆசிரியரை, முதல்வராக இருக்கும் தன் அண்ணன் ஸ்டாலின் வீட்டிற்கு தான் முதலில் அனுப்ப வேண்டும்.
ஸ்டாலினின்
சொற்பொழிவுகளை பொதுக்கூட்டங்களில் கேட்கும்போது, அவரது நாவில், தமிழ்
எவ்வளவு சிக்கித் தடுமாறுகிறது என்பதை உணர முடிகிறது. முதல்வரின் நிலையே
இப்படி என்றால், கனிமொழி உட்பட மற்றவர்களின் உச்சரிப்பைப் பற்றி, கூறவே
வேண்டாம்.
கருணாநிதியின் அழகு தமிழை, அவரது வாரிசுகளும், அவரது
வழிவந்தவர்களும் எப்படி சின்னா பின்னமாக்கி வருகின்றனர் என்பதை, என்னைப்
போல் வேறு மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களும் நன்கு உணர்ந்து இருக்கிறோம்.
எனவே,
கழகக் கண்மணிகள் அனைவருமே, சரியான தமிழ் கற்றுக் கொள்ளும் நிலையில் தான்
இருக்கின்றனர். தமிழின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தி வருபவர்கள், அதே
தமிழை, தங்களது பேச்சின் மூலம் கொலை செய்து வரு கின்றனர் என்பது தான்
உண்மை.
இவர்களுக்கு, மோடியின் தமிழ் ஆர்வத்தை கிண்டல் செய்ய, எந்த
அருகதையும் இல்லை. ஏனெனில், தன் தாய்மொழி குஜராத்தியோடு, தேசிய மொழி ஹிந்தி
மற்றும் ஆங்கிலத்தில் கூட, எந்த மேடையிலும் சரளமாக பேசக்கூடிய திறமை
வாய்ந்தவர், நம் பிரதமர்.
வரும் ஐந்தாண்டுகளில் தமிழை முழுமையாகக்
கற்று, தி.மு.க.,வினருக்கே சவால் விடும் வகையில்,தன் தமிழ் பேச்சு திறமையை
மோடி காட்டும் போது, ஆணவத்தின் உச்சியில் நின்று இன்று பேசுபவர்கள்,
காணாமல் போவரோ அல்லது இவர்களது காது மட்டும் காத துாரம் ஓடி விடுமோ?

