PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சியில் இப்போது இருக்கும் பதவி பித்தர்கள், காமராஜரையும் அவரது பெயரையும், புகழையும் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் புதர் மண்டிக் கிடக்கிறது' என்று புகார் கூறினார். இப்படி பத்திரிகையாளர்களை அழைத்து புகார் கூறி கொண்டிருப்பதற்கு பதிலாக, கட்சி தொண்டர்கள் ஒரு நூறு பேர்களை அங்கு அழைத்து சென்று சுத்தப்படுத்தி இருக்கலாம். அதோடு விட்டாரா...
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர், 'எவ்வளவு காலம் தான் இன்னொரு கட்சியிடம், எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என, கையேந்தி நிற்பது? ஒரு காலத்தில், நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த, காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' எனக் கூறினார்.
இதை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்நாள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மயிர் கூச்செறிந்தது, மெய்சிலிர்த்து, உணர்ச்சி கொந்தளித்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது, 'யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சி தான். ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்...
'ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார்.
யாரை, யாருடன் ஒப்பிடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா? பதவிப் பித்து, காங்கிரஸ்காரர்களை - குறிப்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, இந்த அளவுக்கா பைத்தியக்காரன் ஆக்க வேண்டும்?
இளங்கோவன், ஸ்டாலினை புகழலாம்; அடியேன் சரணம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கலாம்; காங்கிரசிலிருந்து விலகி, கழகத்தில் கூட உறுப்பினராகலாம்.
அதற்காக, பெருந்தலைவர் காமராஜரையா சந்திக்கு இழுப்பது? காமராஜரும் ஸ்டாலினும் ஒன்றா? அந்த இளங்கோவன் வீட்டு நாய் கூட இதை நம்பாதே ஐயா!
இப்போது சொல்லுங்கள். இன்றைக்கு பெருந்தலைவர்,- கர்மவீரர் காமராஜர் உயிருடன் இருந்தால் என்ன செய்திருப்பார்?
-
மக்கள் தெருவில் இறங்க வேண்டிய நிலை!
ரேவதி
பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த
தேர்தலின் போது தற்போதைய தி.மு.க., அரசு கொடுத்த மிக முக்கியமான
வாக்குறுதி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒரு முறை மின் பயன்பாட்டு
கணக்கை மீட்டர் ரீடிங் எடுக்கும் வழிமுறையைக் கொண்டு வருவோம். சாமானிய
மக்களை சிரமப்பட விட மாட்டோம்' என்பது. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு
ஆகிவிட்டது; ஒன்றும் நடக்கவில்லை.
இரண்டு மாதங்களுக்கொருமுறை
எடுக்கும் மீட்டர் ரீடிங் முறையில், மிகப் பெரிய மின் வாரிய சுரண்டல்
நடந்து கொண்டிருக்கிறது. சாமானிய மக்கள், இந்த முறைப்படி தயாரிக்கப்படும்
மின் கட்டண பில் மூலம், தாங்கள் செய்யாத தவறுக்காக, மிகப் பெரிய தொகையை
அபராதமாகக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
உதாரணத்திற்கு, ஒரு மின்
நுகர்வோருக்கு இந்த இரண்டு மாதக் கணக்கெடுப்பில், 1000 யூனிட் பயன்பாடு
ஆகியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இப்போதுள்ள மின் கணக்கு
விகிதப்படி 6,550- ரூபாய் கட்டணம்.
இதே பயன்பாடு, மாதம் ஒரு முறை
ரீடிங் எடுக்கப்பட்டால், ஒரு மாதத்திற்கு 500 யூனிட் தான் கணக்காகிறது
என்பதால், ஒரு மாதத்திற்கு 1,950 ரூபாய் தான் கட்டணம். இரண்டு மாதத்திற்கு
கணக்கிட்டால், 3,900 ரூபாய் தான்.
இந்த இரண்டு மாத கணக்கெடுப்பு
முறையில் நாம், கண்ணுக்குத் தெரிந்தே, கூடுதலாக 2,650 ரூபாய்- கட்டுகிறோம்.
ஆண்டுக்கு ஆறு முறை, இந்த கணக்கெடுப்பு முறையில் கட்டும் போது, 15,900
ரூபாய் கூடுதலாக கட்டுகிறோம்.
ஒரு சாமானிய மத்திய தர குடும்பம்
தாங்கக் கூடிய இழப்புத் தொகையா இது? இப்பொழுது தெரிகிறதா, ஒவ்வொரு மாதமும்
ரீடிங் எடுக்கப்பட்டால் நம் மின்சார கட்டணம் எவ்வளவு குறைவு என்று!
எப்பேர்ப்பட்ட கொள்ளை, சப்தமேயில்லாமல் அரங்கேறி கொண்டிருக்கிறது பாருங்கள்.
இரண்டு
மாதத்திற்கொருமுறை ரீடிங் பார்க்க வர வேண்டிய மின் ஊழியரும், போன முறை,
27ம் தேதி வந்திருந்தால், இந்த முறை, 31ம் தேதி வருகிறார்.
சரியாக இரண்டு மாதம்,- 60 நாட்கள் என்னும் கணக்கும் இல்லை.
இவர்களால்
ஏற்படும் தாமதத்திற்கும் சேர்த்து, நுகர்வோர் பயன்படுத்திய யூனிட்கள்
அதிகமாகி, பில் எகிறுவதால், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம்
ஆயிரக்கணக்கில் அதிகமாகி, மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர்.
இதில்
சாக்கு போக்கு சொல்ல எதுவுமே இல்லை. கட்டாயம் உடனே நிறைவேற்றியே ஆக
வேண்டிய வாக்குறுதி இது.இல்லையேல், மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டி
இருக்கும்.
நடக்கும் முன் தடுக்கலாமே!
-------------------------------------------வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் டூ - - வீலர்
ஓட்டி சென்ற போது நேர்ந்த இரு விபத்தில், நான்கு மாணவர்கள் பலியான வேதனை
செய்தியை ஒரே நாளில் பார்க்க முடிந்தது. 10ம் வகுப்பை கூட தொடாத மாணவர்கள்
பலர், தங்கள் வீடுகளில் உள்ள டூ - வீலரை ஓட்டுகின்றனர்.
நம்
நாட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தால் தான் முறையாக பயிற்சி பெற்று டூ -
வீலர் லைசென்ஸ் எடுக்க முடியும். ஆனால், பள்ளி சீருடையில் டூ - வீலரில்
ஊருக்குள் சுற்றும் மாணவர்களை பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.
ஒரே வண்டியில் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் கூட பயணிக்கின்றனர்.
'என்
மகன், மகள் மிக அருமையாக டூ - வீலர் ஓட்டுவாங்க' என பெற்றோர் பெருமை வேறு
பேசுகின்றனர். முறையாக பயிற்சி பெறாமல், லைசென்ஸ் இன்றி இவர்கள் ஊருக்குள்
டூ - வீலர் ஓட்டுவது பலரையும் அச்சப்பட வைக்கிறது.
லைசென்ஸ் இன்றி
டூ-வீலரில் சுற்றித் திரியும் மாணவர்களை பிடிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட
வேண்டும். பிடிபடும் மாணவர்களின் பெற்றோரை, காவல் நிலையத்திற்கு வரவழைத்து,
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அதிக அளவில் அபராதமும் வசூலிக்க
வேண்டும். இரண்டாவது முறையாக பிடிபடும் போது, அபராதத்துடன் குறுகிய நாட்கள்
சிறை தண்டனையும் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
'தெருவுக்குள்
தானே... பக்கத்து கடைக்கு தானே' என்று தன் மகன், மகளை லைசென்ஸ் இல்லாமல் டூ
- வீலர் ஓட்டுவதை ஒருபோதும் ஊக்கப்படுத்தாதீர்கள் பெற்றோரே. சாதிக்க
வேண்டிய மாணவர்கள் சட்டென மறைவது பேரிழப்பே. நடந்த பின் வருந்துவதை விட,
நடக்கும் முன் தடுக்கலாமே!

